செய்திகள்

கர்நாடகாவை வீழ்த்தி ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சவுராஷ்டிரா

Published On 2019-01-28 12:38 GMT   |   Update On 2019-01-28 12:38 GMT
பெங்களூருவில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகாவை வீழ்த்தி சவுராஷ்டிரா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #RanjiTrophy
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கர்நாடகா - சவுராஷ்டிரா அணிகள் மோதின. பெங்களூருவில் கடந்த 24-ந்தேதி தொடங்கிய ஆட்டத்தில் கர்நாடகா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 275 ரன்கள் சேர்த்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா 236 ரன்னில் சுருண்டது. 39 ரன்கள் முன்னிலையுடன் கர்நாடகா 2-வது இன்னிங்சில் விளையாடியது. சவுராஷ்டிராவின் நேர்த்தியான பந்து வீச்சால் கர்நாடகாவால் 2-வது இன்னிங்சில் அதிக ரன்கள் குவிக்க இயலவில்லை. மயாங்க் அகர்வால் 46 ரன்களும், ஷ்ரேயாஸ் கோபால் 61 ரன்களும் அடிக்க 239 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

இதனால் சவுராஷ்டிரா அணியின் வெற்றிக்கு 279 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 279 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சவுராஷ்டிரா அணியின் தேசாய், பட்டேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தேசாய் 9 ரன்னிலும், பட்டேல் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஜடேஜா டக்அவுட் ஆனார்.

இதனால் 23 ரன்கள் எடுப்பதற்குள் சவுராஷ்டிரா அணி முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ஜேக்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சதம் அடித்தனர். அணியின் ஸ்கோர் 237 ரன்னாக இருக்கும்போது ஜேக்சன் 100 ரன்னில் ஆட்டமிழந்தார்.

புஜாரா 131 ரன்கள் அடித்து களத்தில் நிற்க சவுராஷ்டிரா 91.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் சவுராஷ்டிரா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான விதர்பாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நாக்பூரில் அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்குகிறது.
Tags:    

Similar News