செய்திகள்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: மும்பையை இன்னிங்ஸ் மற்றும் 145 ரன் வித்தியாசத்தில் பந்தாடியது விதர்பா

Published On 2019-01-02 10:54 GMT   |   Update On 2019-01-02 10:54 GMT
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் மும்பையை இன்னிங்ஸ் மற்றும் 145 ரன் வித்தியாசத்தில் பந்தாடியது விதர்பா. #RanjiTrophy
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் கடந்த 30-ந்தேதி தொடங்கிய ஆட்டம் ஒன்றில் மும்பை - விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற விதர்பா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரரும் கேப்டனும் ஆன பாசல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான டைடு உடன் வாசிம் ஜாபர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டைடு 95 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். வாசிம் ஜாபர் சிறப்பாக விளையாடி 178 ரன்கள் குவித்தார். கணேஷ் சதிஷ் 90 ரன்களும், மொகித் கேல் 68 ரன்களும் சேர்க்க இருவரின் ஆட்டத்தால் விதர்பா முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்தது.

பின்னர் மும்பை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் பிஸ்டா 64 ரன்களும், ரஞ்சானே 52 ரன்களும், முத்கர் 62 (அவுட் இல்லை) ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியே மும்பை 252 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.

259 ரன்கள் பின்தங்கிய நிலையில் மும்பை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. விதர்பாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 114 ரன்னில் சுருண்டது. இதனால் விதர்பா இன்னிங்ஸ் மற்றும் 145 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விதர்வா வீரர் சர்வாத் 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
Tags:    

Similar News