செய்திகள்

கோலி கேப்டன் பதவியில் சரியாக செயல்படவில்லை - நாசர் உசேன்

Published On 2018-08-06 07:15 GMT   |   Update On 2018-08-06 07:15 GMT
கோலி கேப்டன் பதவியில் சரியாக செயல்படவில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன் கூறியுள்ளார். #ViratKohli

லண்டன்:

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

கேப்டன் வீராட்கோலி தனி ஒருவராக போராடி இறுதியில் பலன் இல்லாமல் போனது. அவர் மொத்தம் 200 ரன்கள் (முதல் இன்னிங்சில் 149, 2-வது இன்னிங்சில் 51 ரன் எடுத்தார்).

மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். முரளிவிஜய், தவான், ராகுல், ரகானே, தினேஷ் கார்த்திக் என மொத்த பேட்டிங்கும் மோசமாக இருந்தது. இதனால் 194 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் இந்திய அணி தோல்வி தழுவியது.

இந்தநிலையில் இந்த தோல்வி தொடர்பாக வீராட்கோலியின் கேப்டன் ஷிப் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான நாசர் உசேன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-

 


இந்த டெஸ்ட் போட்டில் வீராட்கோலியின் பேட்டிங் தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. வெற்றியின் பக்கம் இருக்க அவர் தகுதியுடையவர். அவர் தனி நபராக இந்திய அணியை கொண்டு சென்று இருக்கிறார்.

ஆனாலும் வீராட்கோலி தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும். இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் ஒரு கட்டத்தில் 87 ரன்னில் 7 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அப்போது சாம் குர்ரான், ஆதில் ரஷீத் களத்தில் இருந்தனர். அந்த நேரத்தில் ஏதோ காரணத்துக்காக அஸ்வின் 1 மணி நேரம் போட்டியில் இருந்து வெளியே இருந்தார். அப்போது இந்திய அணி தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. கோலி தனது கேப்டன் ஷிப்பில் சரியாக செயல்படவில்லை. அவர் கேப்டன் ஷிப்பில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும்.

சுழற்பந்து வீரர்களில் குறைவான ரன்ரேட் வைத்துள்ள இடதுகை பேட்ஸ்மேனான குர்ரான் களத்தில் இருக்கும் போது அஸ்வினை வெளியேற அனுமதித்தது ஏன்?

இந்த டெஸ்டில் மைதானத்தின் தன்மையும் முக்கியமானது. இது பிளாட் பெல்ட்டர் ஆடுகளம் அல்ல. தரம் வாய்ந்த பந்துவீச்சும், கேப்டனின் செயல்பாடும் தான் முக்கிய பங்களிப்பாக இருக்கும். அந்த வகையில் இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் அபாரமாக செயல்பட்டார்.

இவ்வாறு நாசர் உசேன் கூறியுள்ளார். #ViratKohli

Tags:    

Similar News