செய்திகள்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் டிராவில் முடிந்தது

Published On 2018-07-08 09:59 GMT   |   Update On 2018-07-08 09:59 GMT
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு கொண்ட டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. #INDA #WIA
இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா இங்கிலாந்து லயன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

தற்போது நான்கு நாட்கள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தியா ‘ஏ’ - வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான போட்டி கடந்த 4-ந்தேதியில் இருந்து நேற்றுவரை (7-ந்தேதி) நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா ‘ஏ’ அணி 133 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அம்பிரிஸ் சதத்தால் 383 ரன்கள் குவித்தது.

250 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா ‘ஏ’ அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் சொதப்பிய இந்தியா ‘ஏ’ அணி வீரர்கள் 2-வது இன்னிங்சில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

தொடக்க வீரர் பிரித்வி ஷா (188), 3-வது வீரர் சமர்த் (137) ஆகியோர் சதம் அடித்தனர்.  மயாங்க் அகர்வால் (68), கருண் நாயர் (93) அரைசதம் அடித்தனர். இவர்கள் ஆட்டத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 609 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்தியா ‘ஏ’.



பின்னர் கடைசி நாளான நேற்று 360 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ களம் இறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியை ஆல்அவுட்டாக்கி வெற்றிபெற வேண்டும் என்ற உத்வேகத்தில் இந்தியா ‘ஏ’ பந்து வீச்சாளர்கள் பந்து வீசினார்கள்.

ஆனால் கடைசி நாள் ஆட்ட முடியும் நேரத்தில் 7 விக்கெட்டுக்களை மட்டுமே வீழ்த்த முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ்  ‘ஏ’ 76 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடக்கிறது.
Tags:    

Similar News