செய்திகள்

ஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்

Published On 2018-04-26 18:13 GMT   |   Update On 2018-04-26 18:13 GMT
ஐபிஎல் தொடரில் ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் தனது சிறப்பான பந்து வீச்சால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீழ்த்தியது. #VIVOIPL #SRHvKXIP #SunrisersHyderabad #KingsXIPunjab
ஐதராபாத்:

ஐபிஎல் தொடரின் 25-வது ஆட்டம் ஐதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து ஐதராபாத் அணியின் ஷிகர் தவான், கேன் வில்லியம்சன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

பஞ்சாப் அணியின் அன்கித் ராஜ்பூட் முதலில் இருந்தே சிறப்பாக பந்துவீசினார். இதனால் ஐதராபாத் அணியின் விக்கெட்டுகள் 
விரைவில் வீழ்ந்தன.

மணீஷ் பாண்டே மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. யூசுப் பதான் 21 ரன்களுடன் களத்தில் இருந்தார். பஞ்சாப் அணி சார்பில் அன்கித் ராஜ்பூட் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.



இதையடுத்து, பஞ்சாப் அணி 133 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. லோகேஷ் ராகுலும், கிறிஸ் கெயிலும் களமிறங்கினர். இருவரும் இணைந்து பஞ்சாப் அணி அரை சதம் கடக்க உதவினர்.
 
ஆனால், ஐதராபாத் அணியினர் துல்லியமான பந்துவீச்சு மற்றும் சிறப்பான பீல்டிங்கால் பஞ்சாப் அணியை கட்டுப்படுத்தியது.
கெயில் 23 ரன்னுடனும், ராகுல் 32 ரன்னுடனும் அவுட்டாகினர். அடுத்து வந்தவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

இதனால் பஞ்சாப் அணி 15.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து தத்தளித்தது. இறுதியில் பஞ்சாப் அணி 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும், சந்தீப் சர்மா, ஷகிப் அல் ஹசன், பாசில் தம்பி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதையடுத்து, ஐதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. #VIVOIPL #SRHvKXIP #SunrisersHyderabad #KingsXIPunjab 
Tags:    

Similar News