செய்திகள்

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மணிகா பத்ரா, ஹர்மீத் தேசாய் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை

Published On 2018-04-20 23:10 GMT   |   Update On 2018-04-20 23:10 GMT
அர்ஜுனா விருதுக்கு காமன்வெல்த் போட்டியின் டேபிள் டென்னிஸ் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற மணிகா பத்ரா, ஹர்மீத் தேசாய் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. #ManikaBatra #HarmeetDesai #ArjunaAward

புதுடெல்லி:

சிறந்த விளையாட்டு வீரர், விராங்கனைகளுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு காமன்வெல்த் போட்டியின் டேபிள் டென்னிஸ் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற மணிகா பத்ரா, ஹர்மீத் தேசாய் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்தனர். இதனால் இந்தியா இந்தாண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்தது.

குறிப்பாக டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், துப்பாக்கிச்சுடுதல், குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டவர்கள் பதக்கங்களை குவித்தனர். 

இந்நிலையில், டேபிள் டென்னிஸ் போட்டியில் நான்கு பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனை மணிகா பத்ராவின் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர் குழு மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் தங்கப்பதக்கமும், மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் வென்றார். இந்தாண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு நான்கு பதக்கங்கள் வென்ற ஒரே நபர் என்ற பெருமை மணிகா பத்ராவுக்கு கிடைத்துள்ளது.

இதுதவிர காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியின் குழு பிரிவில் தங்கப்பதக்கமும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் வென்ற ஹர்மீத் தேசாயின் பெயரும் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைக்கான கடிதத்தை இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. #CommonWealthGames2018 #ManikaBatra #HarmeetDesai #ArjunaAward
Tags:    

Similar News