செய்திகள்

காயத்துக்கு ஆபரேஷன் - பிரேசில் வீரர் நெய்மருக்கு 3 மாதங்கள் ஓய்வு

Published On 2018-03-02 05:26 GMT   |   Update On 2018-03-02 05:26 GMT
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மரின் கால் காயத்துக்கு நாளை ஆபரேஷன் செய்யப்படுவதால் 3 மாதங்கள் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. Neymar #ChampionsLeague
ரியோ டி ஜெனீரோ:

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் 26 வயதான நெய்மர், பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு, லிக்யூ தொடரில் மார்செலி கிளப்புக்கு எதிரான ஆட்டத்தில் களம் கண்ட நெய்மர் காலில் காயம் அடைந்தார். வலி தாங்க முடியாமல் கதறிய அவர் ‘ஸ்டிரச்சர்’ உதவியுடன் வெளியேறினார். பரிசோதனையில், கால்பாதத்தின் மேல்பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஆபரேஷன் செய்வதற்காக அவர் தாயகம் திரும்பினார். ஆபரேஷனுக்கு பிறகு 3 மாதங்கள் வரை அவரால் விளையாட முடியாது. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் முக்கியமான ஆட்டத்தில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன்- ரியல்மாட் அணிகள் வருகிற 6-ந்தேதி மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் நெய்மர் ஆட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால், அது பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

பிரேசில் அணியின் டாக்டர் ரோட்ரிகோ லாஸ்மர் கூறுகையில், ‘நெய்மர் மிகுந்த வேதனையில் இருக்கிறார். ஆனால் ஆபரேஷனை தவிர வேறு வழியில்லை என்பதை புரிந்து கொண்டுள்ளார். கால் காயத்துக்கு நாளை ஆபரேஷன் செய்யப்படுகிறது. காயம் குணமடைய இரண்டரை மாதத்தில் இருந்து 3 மாதங்கள் வரை ஆகும். ஆனால் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு (ஜூன் 14-ந்தேதி தொடக்கம்) போதிய காலஅவகாசம் இருப்பதால் அதற்குள் அவர் உடல்தகுதியை எட்டி விடுவார்’ என்றார்.  Neymar #ChampionsLeague

Tags:    

Similar News