செய்திகள்

முத்தரப்பு டி20யில் தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து

Published On 2018-02-18 11:06 GMT   |   Update On 2018-02-18 11:06 GMT
இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 2 ரன்னில் தோல்வியடைந்தாலும், ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #NZvENG
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து மூன்று போட்டிகளில் ஒன்றில் வெற்றியும், இரண்டில் தோல்வியும், இங்கிலாந்து மூன்று போட்டியிலும் தோல்வியை சந்தித்திருந்தது.

இந்நிலையில் கடைசி லீக் ஆட்டம் ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தாவித் மலன் 36 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 53 ரன்களும், மோர்கன் கடைசி வரை நின்று 46 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 80 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 20 ஒவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. ஜோஸ் பட்லர் (2), பில்லிங்ஸ் (6), வில்லே (10), டாசன் (10) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணி சார்பில் போல்ட் 4 ஓவரில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்யும். நியூசிலாந்து தோற்றாலும் இரு அணிகளும் ஒரு வெற்றியை பதிவு செய்திருக்கும். இதனால் இந்த போட்டியில் தோற்றாலும் கூட ரன்ரேட் அடிப்படையில் 20 ஓவரில் 175 ரன்கள் எடுத்தால் இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம் என நியூசிலாந்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெற்றியை எதிர்பார்க்காமல் 120 பந்தில் 175 ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற இலக்கோடு நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தொடக்கம் முதலே கொலின் முன்றோ அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் ஓவரை வில்லே வீசினார். இந்த ஓவரில் கொலின் முன்றோ இரண்டு சிக்சர்கள் விளாசினார்.

2-வது ஓவரை டாம் குர்ரான் வீசினார். இந்த ஓவரில் இரண்டு சிக்ஸ் ஒரு பவுண்டரி விளாசினார். ஜோர்டான் வீசிய 4-வது ஓவரில் ஒரு சிக்சரும், வில்லே வீசிய 5-வது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரியும் விளாசினார். இதனால் நியூசிலாந்து 5 ஓவரில் 66 ரன்கள் குவித்தது. 5-வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்ததன் மூலம் கொலின் முன்றோ 18 பந்தில் அரைசதம் அடித்தார்.



7-வது ஓவரை ரஷித் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் கொலின் முன்றோ ஆட்டமிழந்தார். இவர் 21 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சருடன் 57 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதற்கிடையே சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷிம் மற்றும் டாசன் சிறப்பாக பந்து வீசி நியூசிலாந்தின் ரன்குவிப்பை கட்டுப்படுத்தினார்கள்.

13 ஒவர்கள் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. 14-வது ஓவரை டாசன் வீசினார். முதல் 3 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த டாசன், இந்த ஓவில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 18 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் 8 ஓவரில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியதால், பகுதி நேர பந்து வீச்சாளரான தாவித் மலனை இங்கிலாந்து பயன்படுத்தியது.

இவர் 15-வது ஓவரில் 12 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அடுத்த ஓவரை ஜோர்டான் வீசினார். இந்த ஓவரில் நியூசிலாந்து 14 ரன்கள் சேர்த்தது. அத்துடன் மார்ட்டின் கப்தில் 44 பந்தில் அரைசதம் அடித்தார். 17-வது ஓவரை தாவித் மலன் வீசினார். இந்த ஓவரில் கப்தில் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸ் அடித்தார். 3-வது பந்தில் அவுட் ஆனார். மார்ட்டின் கப்தில் 47 பந்தில் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 62 ரன்கள் சேர்த்தார்.

நியூசிலாந்து அணி 17 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. 18-வது ஒவரை குர்ரான் வீசினார். இந்த ஓவரில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை இழந்து 7 ரன்கள் எடுத்தது.



19-வது ஓவரை ஜோர்டான் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் நியூசிலாந்து ஒரு ரன் எடுத்து 175 ரன்களை எட்டியது. இதன்மூலம் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நியூசிலாந்து 19-வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. டாம் குர்ரான் இந்த ஓவரை வீசினார்.

இவர் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் நியூசிலாந்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. என்றாலும் 175 ரன்னைத் தாண்டியதால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 21-ந்தேதி புதன்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
Tags:    

Similar News