செய்திகள்

விக்கெட்டுகளை வீழ்த்த சுழற்பந்து வீரர்களுக்கு உதவும் டோனி

Published On 2018-02-07 05:43 GMT   |   Update On 2018-02-07 05:43 GMT
விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய சுழற்பந்து வீரர்களுக்கு டோனியின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. எந்த திசையில் பந்து வீசினால் விக்கெட்டை வீழ்த்த இயலும் என்பதில் அவர் உதவுகிறார்.#SAvIND #Dhoni
கேப்டவுன்:

இந்திய கிரிக்கெட்டின் வெற்றி கேப்டன் மகேந்திர சிங் டோனி.

36 வயதான இவர் இரண்டு உலக கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

2007-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி (50 ஓவர்) உலக கோப்பையையும் டோனி தலைமையில்தான் இந்திய அணி கைப்பற்றியது. அதோடு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று பெருமை சேர்த்தார்.

2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஒய்வு பெற்றார். 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

கேப்டன் பதவியை துறந்த அவர் இந்த இரண்டு வடிவிலான போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார்.

இந்திய அணிக்கு வீராட் கோலி கேப்டனாக இருந்தாலும் டோனி தான் அவருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார். பீல்டிங் வியூகம், எந்த பந்து வீச்சாளரை எப்போது கொண்டு வருவது என்பது பற்றி அவர் தான் அறிவுரை வழங்கி முக்கிய பங்காற்றி வருகிறார். கோலி ஆக்ரோ‌ஷமானவர். டோனி அமைதியானவர். இதனால் கோலியின் ஆக்ரோ‌ஷத்தை அவர் பல வகைகளில் கட்டுப்படுத்துகிறார்.



மேலும் சுழற்பந்து வீரர்களுக்கு டோனி உதவுகிறார். யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் டோனியின் பங்களிப்பு இருக்கிறது. கேப்டன் பதவியில் அனுபவம் பெற்ற வீரரான அவர் விக்கெட் கீப்பராக இருப்பதால் பேட்ஸ்மேன்களின் பலம் மற்றும் பலவீனத்தை நன்கு அறிந்தவர். இதனால் எந்த திசையில் பந்து வீசினால் விக்கெட்டை வீழ்த்த இயலும் என்பதில் அவர் உதவுகிறார்.

செஞ்சூரியனில் நடந்த 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 118 ரன்னில் சுருண்டது. அந்த அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் டுமினி ஈடுபட்டார். அவரை எப்படி பந்து வீசி அவுட் செய்ய வேண்டும் என்பது பற்றி சாஹலிடம் டோனி அறிவுரை வழங்கினார். அதன்படி டுமினியை எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் செய்தார். எப்படி பந்து வீசுவது பற்றி டோனி கூறுவது ஸ்டம்பில் உள்ள ‘மைக்‘ மூலம் தெளிவாக கேட்கிறது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின் போது மேக்ஸ்வெல் மிட்விக்கெட் திசையில் சாஹல் பந்தை அடித்து ஆடினார். அவரை எப்படி அவுட் செய்ய வேண்டும் என்பது பற்றி டோனி உதவி அதன்படியே ஆட்டம் இழக்க செய்ய வைத்தார்.

இப்படி சுழற்பந்து வீரர்களுக்கு விக்கெட்டுகளை வீழ்த்த டோனி உதவியாக இருந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

குல்தீப்யாதவ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எங்களது 50 சதவீத பணியை டோனி செய்து விடுகிறார். என்று பாராட்டி இருந்ததார். இதேபோல சாஹலும் டோனியை புகழ்ந்து தள்ளி இருந்தார். #tamilnews
Tags:    

Similar News