செய்திகள்

பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

Published On 2018-01-12 23:11 GMT   |   Update On 2018-01-12 23:11 GMT
துபாயில் நடைபெற்று வரும் பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
துபாய்:

பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தானும், இந்தியாவும் மோதின.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, பாகிஸ்தான் அணி களமிறங்கியது. நிர்ணயம் செய்த 40 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜமீலும், கேப்டன் நிசார் அலியும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தனர். நிசார் அலி 63 ரன்களுக்கு அவுட்டானார். ஜமீல் 94 ரன்கள் எடுத்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

இதையடுத்து, 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தீபக் மாலிக் 71 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். வெங்கடேஷ் அதிரடியாக விளையாடி 55 பந்துகளில் 64 ரன்களும், அஜய் ரெட்டி 34 பந்துகளில் 47 ரன்களும் எடுத்தனர். இறுதியில், இந்திய அணி 34.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Tags:    

Similar News