செய்திகள்

நாக்பூர் - டெல்லி ஆடுகளங்களை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்க முடிவு

Published On 2017-11-22 05:25 GMT   |   Update On 2017-11-22 05:25 GMT
தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்துக்கு தயாராகும் வகையில் நாக்பூர், டெல்லி ஆடுகளங்களை வேகப்பந்துக்கு சாதகமாக அமைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாக்பூர்:

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.

இந்திய ஆடுகளங்கள் (பிட்ச்) சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாகவே இருக்கும். ஆனால் கொல்கத்தா டெஸ்டில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டு இருந்தது. இதில் முதல் இன்னிங்சில் சொதப்பிய இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங், பந்து வீச்சில் அசத்தியது.

இலங்கை தொடர் முடிந்ததும் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. அங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அந்த தொடருக்கு தயாராகும் வகையில் இலங்கை டெஸ்ட் தொடரில் கொல்கத்தா போட்டிக்கு வேகப்பந்து ஆடுகளம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இதே போல் 2-வது டெஸ்ட் நடக்கும் நாக்பூர், 3-வது டெஸ்ட் நடக்கும் டெல்லி ஆடுகளங்களை வேகப்பந்துக்கு சாதகமாக அமைக்க இந்திய அணி நிர்வாகம் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கிரிக்கெட் வாரியத்திடம் வலியுறுத்தி உள்ளது.

இதனை ஏற்று ஆடுகளங்களை புற்களுடன் தயாரிக்கும்படி கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதனால் மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் வேகப்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள்.
Tags:    

Similar News