செய்திகள்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 172 ரன்களில் ஆல் அவுட்

Published On 2017-11-18 06:46 GMT   |   Update On 2017-11-18 06:46 GMT
கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 172 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
கொல்கத்தா:

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்த டெஸ்டின் முதல் 2 நாட்கள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. முதல் நாளில் 11.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. அப்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 17 ரன் எடுத்து இருந்தது.

இதேபோல நேற்றைய 2-வது நாள் ஆட்டமும் மழையால் 21 ஓவர்களே வீசப்பட்டது. இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 74 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 47 ரன்னும், விர்த்திமான் சஹா 6 ரன்னும் எடுத்து இருந்தனர். முதல் 2 நாட்களில் 32.5 ஒவர்கள் மட்டுமே வீசப்பட்டது.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. புஜாராவும், சஹாவும் தொடர்ந்து விளையாடினார்கள். மழையால் ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் இருந்ததால் இந்திய பேட்ஸ்மேன்கள் நிலை தடுமாறினர். புஜாரா மட்டுமே தாக்குப்பிடித்து ஆடினார்.



அவர் 108 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரியுடன் 50 ரன்னை தொட்டார். 52-வது டெஸ்டில் விளையாடும் புஜாராவுக்கு இது 16-வது அரை சதம் ஆகும். 52 ரன் எடுத்து இருந்தபோது அவர் லகிரு காமேஜ் பந்தில் ‘போல்டு’ ஆனார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 6 விக்கெட்டுக்கு 79 ரன்னாக (37.2 ஓவர்) இருந்தது. அடுத்து ஜடேஜா களம் வந்தார்.

7-வது விக்கெட்டான சஹா- ஜடேஜா ஜோடி தாக்கு பிடித்து விளையாடியது. இதனால் 42.1-வது ஓவரில் இந்தியா 100 ரன்னை தொட்டது. ஜடேஜா 22 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து புவனேஷ்வர்குமார் களம் இறங்கினார். புவனேஷ்வர்குமார்-சஹா ஜோடி விளையாடிய நிலையில் சஹா ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷமி களம் இறங்கினார். புவனேஷ்வர்குமாரும் 13 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவுட்டானார். இதன்மூலம் இந்தியா தனது 9-வது விக்கெட்டை இழந்தது.


ஷமி-உமேஷ் யாதவ் இருவரும் களத்தில் இருந்தனர். ஷமி அடித்த பந்தை கேட்ச் பிடித்து இலங்கை வீரர் ஷனகா கடைசி விக்கெட்டை வீழ்த்தினார். எனவே, முதல் இன்னிங்சில் இந்தியா 172 ரன்களில் சுருண்டது. இதையடுத்து இலங்கை முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது.
Tags:    

Similar News