செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு சதம்: மீண்டும் முதல் இடத்தை பிடித்தார் விராட் கோலி

Published On 2017-10-30 11:08 GMT   |   Update On 2017-10-30 11:08 GMT
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரண்டு சதங்களுடன் 263 ரன்கள் குவித்த விராட் கோலி மீண்டும் முதல் இடம்பிடித்தார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றோடு முடிவடைந்தது. முதல் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி, நேற்றைய 3-வது ஆட்டத்திலும் சதம் அடித்தார். மூன்று போட்டிகளில் 263 ரன்கள் குவித்த கோலி, தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்ற இவரது ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.



இதன்மூலம் டி வில்லியர்ஸை பின்னுக்குத் தள்ளி மீண்டும் விராட் கோலி முதல் இடத்தை பிடித்தார். விராட் கோலி 889 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். டி வில்லியர்ஸ் 872 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். கடந்த வாரம் வங்காள தேசத்திற்கு எதிராக சிறப்பாக விளையாடிய டி வில்லியர்ஸ் கோலியை பின்னுக்குத் தள்ளி முதல் இடம்பிடித்தார். தற்போது விராட் கோலி மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.



மேலும் ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை புள்ளியில் அதிக புள்ளிகள் பெற்ற இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். விராட் கோலி 889 புள்ளிகள் பெற்றதுதான் அதிகபட்சம். சச்சின் தெண்டுல்கர் 1998-ல் 887 புள்ளிகளும், 2000-ல் கங்குலி 844 புள்ளிகளும், டோனி 2009-ல் 836 புள்ளிகளும், அசாருதீன் 1993-ல் 811 புள்ளிகளும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.



பந்து வீச்சில் 6-வது இடத்தில் இருந்து பும்ரா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் 719 புள்ளிகள் பெற்றுள்ளார். ஹசன் அலி 759 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இம்ரான் தாஹிர் 743 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
Tags:    

Similar News