செய்திகள்

காயத்தால் இரட்டை சத வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்

Published On 2017-09-28 02:58 GMT   |   Update On 2017-09-28 02:58 GMT
இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய ஒரு நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லீவிஸ்-க்கு காயம் ஏற்பட்டதால் அவர் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
லண்டன்:

லண்டன் ஓவலில் நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் 33 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் எவின் லீவிஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியை தூக்கி நிறுத்தினார். அதிரடி ஜாலம் காட்டிய அவர் 176 ரன்கள் (130 பந்து, 17 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசிய நிலையில், 47-வது ஓவரின் போது காயமடைந்தார்.

வேகப்பந்து வீச்சாளர் ஜாக் பால் வீசிய பந்தை அசுர வேகத்தில் அடித்த போது பந்து பேட்டின் உள்பகுதியில் பட்டு வலது கணுக்காலை பதம் பார்த்து விட்டது. வலியால் துடித்த அவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை. இதையடுத்து மிகுந்த ஏமாற்றத்துடன் ஸ்டிரச்சர் உதவியுடன் வெளியேறினார்.

மேலும் 22 பந்துகள் எஞ்சி இருந்ததால் கடைசி வரை களத்தில் நின்றிருந்தால் இரட்டை சதம் அடித்த 6-வது வீரர் என்ற சாதனை பட்டியலில் இணைந்திருப்பார். துரதிர்ஷ்டவசமாக காயத்தில் சிக்கிவிட்டார். கேப்டன் ஜாசன் ஹோல்டர் தனது பங்குக்கு 77 ரன்கள் எடுத்தார்.
Tags:    

Similar News