செய்திகள்

3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவின் வெற்றிக்கு 294 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸி.

Published On 2017-09-24 11:41 GMT   |   Update On 2017-09-24 11:41 GMT
இந்தூரில் நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் போட்டியில் ஆரோன் பிஞ்சியின் சதத்தால் இந்தியாவின் வெற்றிக்கு 294 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க வீரர் கார்ட்ரைட், விக்கெட் கீப்பர் வடே நீக்கப்பட்டு ஆரோன் பிஞ்ச் மற்றும் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து விளையாடுவதை விட்டுவிட்டு விக்கெட்டை காப்பாற்றும் வகையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஆஸ்திரேலியா முதல் 10 ஓவரில் 49 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 13.3 ஓவரில் 70 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. வார்னர் 44 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் க்ளீன் போல்டானார்.



அடுத்து ஸ்மித் களம் இறங்கினார். ஆரோன் பிஞ்ச் உடன் இணைந்து ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலியா 19.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. ஆரோன் பிஞ்ச் 61 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். அதன்பின் பிஞ்ச் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலியாவின் மளமளவென உயர்ந்தது. 110 பந்துகளை சந்தித்து ஆரோன் பிஞ்ச் சதம் அடித்தார். அதில் 11 பவுண்டர், 3 சிக்சர் அடங்கும். ஆஸ்திரேலியா 34.2 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 200 ரன்னைத் தொட்டது.



இருவருடைய ஆட்டத்தையும் பார்க்கும்போது ஆஸ்திரேலியா 300 ரன்னை எளிதாக தாண்டும் நிலையில் இருந்தது. 38-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் பிஞ்ச் கேதர் ஜாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். பிஞ்ச் 125 பந்தில் 12 பவுண்டரி, 5 சிக்சருடன் 124 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் விளையாடிய ஸ்மித் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 63 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்தது.

இருவரும் வெளியேறிய பின்னர் ஆஸ்திரேலியாவின் ரன்விகிதம் அப்படியே சரிய ஆரம்பித்தது. மேக்ஸ்வெல் 5 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். ட்ராவிஸ் ஹெட் 4 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் அவுட்டாகமல் 27 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 294 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.



இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ், பும்ரா தலா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா, சாஹல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது.
Tags:    

Similar News