செய்திகள்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணியில் லியாண்டர் பெயசுக்கு இடமில்லை

Published On 2017-08-15 02:44 GMT   |   Update On 2017-08-15 02:45 GMT
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியில் யுகி பாம்ப்ரி, சகெத் மைனெனி ஆகியோர் மீண்டும் இடம் பிடித்துள்ளனர். லியாண்டர் பெயசுக்கு இடம் கிடைக்கவில்லை.
புதுடெல்லி:

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உலக சுற்று ‘பிளே-ஆப்’ ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் கனடாவில் உள்ள எட்மன்டனில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக பெங்களூவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடாத யுகி பாம்ப்ரி, சகெத் மைனெனி ஆகியோர் உடல் தகுதி பெற்று நல்ல பார்மில் இருப்பதால் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

மகேஷ்பூபதி தலைமையிலான இந்திய அணியில் ராம்குமார் ராமநாதன், ரோகன் போபண்ணா ஆகியோரும் இடம் பிடித்து இருக்கிறார்கள். மாற்று வீரர்களாக பிராஜ்னேஷ் குணேஸ்வரன், ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் இடம் பெற்று இருந்த 44 வயதான லியாண்டர் பெயஸ் களம் இறக்கப்படவில்லை. இதனால் அவர் பாதியில் போட்டியில் இருந்து வெளியேறினார். கேப்டன் மகேஷ்பூபதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விலகியதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் அவருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் 42 வெற்றிகளுடன், அதிக வெற்றிகளை குவித்த இத்தாலி வீரர் நிகோலா பியட்ரான்ஜெலியுடன் சாதனையை சமன் செய்து இருக்கும் லியாண்டர் பெயஸ் இன்னும் ஒரு வெற்றி பெற்றால் நிகோலாவின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News