செய்திகள்
வெற்றிக்கு பிறகு தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியினர் ‘செல்பி’ எடுத்துக் கொண்ட காட்சி

டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றி

Update: 2017-07-31 03:48 GMT
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் காரைக்குடி காளை அணியை வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது.
நெல்லை:

2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய மூன்று இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் நெல்லையில் நேற்று மாலை நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்சும், காரைக்குடி காளையும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த காரைக்குடி கேப்டன் பத்ரிநாத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதன்படி காரைக்குடி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் அனிருதாவும், விஷால் வைத்யாவும் தாக்குப்பிடிக்க முடியாமல் வந்த வேகத்தில் நடையை கட்டினர். அனிருதாவை (1 ரன்) வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சனும், விஷால் வைத்யாவை (1 ரன்) சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தரும் காலி செய்தனர். இதற்கிடையே 2-வது விக்கெட்டுக்கு நுழைந்த கேப்டன் பத்ரிநாத் லட்சுமணின் பந்து வீச்சில் இரண்டு சிக்சர்களை பறக்க விட்டார். ஆனாலும் அவரும் (12 ரன்) நிலைக்கவில்லை. ஸ்ரீனிவாசன் (2 ரன்), கணபதி (2 ரன்) ஆகியோரின் பேட்டிங்குக்கு ஆயுசு குறைவு தான். 25 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து காரைக்குடி அணி தத்தளித்தது.

இந்த சூழலில் மிடில் வரிசையில் அடியெடுத்து வைத்த ஷாஜகான் காரைக்குடி அணியின் கவுரவத்தை காப்பாற்றினார். விக்கெட் சரிவுக்கு மத்தியில் சிக்சர் மழை பொழிந்த அவர் அணி மூன்று இலக்கை தொடுவதற்கும் வித்திட்டார். கடைசியில் ஷாஜகான் (43 ரன், 29 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் கவுசிக் காந்தியின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். 20 ஓவர் முடிவில் காரைக்குடி அணி 9 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்தது. தூத்துக்குடி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், வாஷிங்டன் சுந்தர், அவுசிக் ஸ்ரீனிவாஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அடுத்து 123 ரன்கள் இலக்கை நோக்கி தூத்துக்குடி அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் வாஷிங்டன் சுந்தர், சந்தித்த 2-வது பந்திலேயே வெளியேறி இருக்க வேண்டியது. பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர் சுவாமிநாதனிடம் கொடுத்த நல்ல கேட்ச் வாய்ப்பை அவர் நழுவ விட்டார். அது தான் காரைக்குடி காளைக்கு குந்தகமாக அமைந்து போனது. முந்தைய ஆட்டத்தின் ஹீரோவான மற்றொரு தொடக்க வீரர் கவுசிக் காந்தி 5 ரன்னில் கிளன் போல்டு ஆனாலும், வாஷிங்டன் சுந்தர் நிலைகொண்டு விளையாடினார்.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த தூத்துக்குடி அணிக்கு, காரைக்குடி காளை பவுலர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்தனர். கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது.

இதன் பின்னர் வாஷிங்டன் சுந்தரும், ஆகாஷ் சும்ராவும் கைகோர்த்து தடாலடியாக சில ஷாட்டுகளை விளாசி காரைக்குடி காளையின் நம்பிக்கையை சீர்குலைத்தனர். கணபதியின் ஓவரில் வாஷிங்டன் சுந்தர் தொடர்ந்து இரு சிக்சர்களை நொறுக்கி வெற்றி இலக்கை எட்ட வைத்தார்.

தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களுடனும் (47 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), ஆகாஷ் சும்ரா 15 ரன்களுடனும் (12 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். ஆல்-ரவுண்டராக ஜொலித்த வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தூத்துக்குடி அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி (ஹாட்ரிக்) இதுவாகும். ஏற்கனவே திண்டுக்கல் டிராகன்சையும், திருச்சி வாரியர்சையும் தோற்கடித்து இருந்தது. அதே சமயம் 3-வது ஆட்டத்தில் ஆடிய காரைக்குடி அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.
Tags:    

Similar News