செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தானுக்கு சொந்த மண்ணில் உற்சாக வரவேற்பு

Published On 2017-06-20 10:32 GMT   |   Update On 2017-06-20 10:32 GMT
இந்தியாவை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணிக்கு சொந்த மண்ணில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.



முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி பகர் சமானின் (114) சதத்தால் 338 ரன்கள் குவித்தது. பின்னர் 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.



ரோகித் சர்மா, கோலி, தவான் ஆகிய முக்கிய விக்கெட்டுக்களை மொகமது ஆமிர் 33 ரன்னுக்குள் வீழ்த்தியதால் இந்தியா 158 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றியது.



சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. லண்டனில் உள்ள பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.



பாகிஸ்தான் அணி இன்று சொந்த நாடு திரும்பியது. அங்கே ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் வந்த வாகனம் ஆமைபோல் ஊர்ந்து சென்றது.
Tags:    

Similar News