செய்திகள்

டோனிக்கு கிடைக்கும் தனிச்சிறப்பு மற்ற வீரர்களுக்கு கிடைக்கவில்லை: ஹர்பஜன் சிங் ஆதங்கம்

Published On 2017-05-27 15:04 GMT   |   Update On 2017-05-27 15:04 GMT
டோனிக்கு கிடைக்கும் தனிச்சிறப்பு எனக்கு கிடைக்கவில்லை என்று சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறாத ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். இவருக்கு தற்போது இந்திய சீனியர் அணியில் இடம் கிடைப்பதில்லை.

தற்போது நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்காக விளையாடினார். மும்பை இந்தியன்ஸ் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

ஜூன் 1-ந்தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் சாம்பியன்ஸ் டிராபி் 50 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று ஹர்பஜன் சிங் எதிர்பார்த்தார். ஆனால் அதிலும் இடம் கிடைக்கவில்லை.

அதேவேளையில் விக்கெட் கீப்பராக டோனி தேர்வு செய்யப்பட்டார். ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடியபோது அவரை எடுக்காமல் டோனியை தேர்வு செய்ததற்கு விமர்சனம் எழுந்தது. இந்த விமர்சனம் குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறுகையில் ‘‘டோனியின் பங்களிப்பை அவரது பேட்டிங் மற்றும் உலகத்தரம் வாய்ந்த விக்கெட் கீப்பிங் பணியுடன் மட்டுமே வைத்து வரையறுக்கக்கூடாது. அவரது சிறப்பு வாய்ந்த போட்டி யுக்தியும் முதன்மையானது’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் டோனி போன்ற வீரர்களுக்கு கிடைக்கும் தனிச்சிறப்பு எனக்கு கிடைக்கவில்லை என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘டோனி தன்னுடைய பேட்டிங் திறமையை வைத்து மட்டுமே சிறந்த வீரராக வலம் வரவில்லை. உண்மையிலேயே அவர் தற்போது அதிரடி வீரராக விளையாடவில்லை. அதை நாம் பார்க்கிறோம்.

ஆனால், அவர் ஒரு கேப்டன், போட்டியை சிறப்பாக உணர்ந்து இருக்கிறார். அவர் களத்தில் நிற்கும்போது இளைஞர்களுக்கும், இனிமேல் போட்டியில் என்ன இருக்கிறது என்று வீரர்கள் ஒரு கட்டத்தில் விரக்தியில் இருக்கும்போதும் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும். ஆகவே, அவர் தனிச்சிறப்பு பெறுகிறார்.

ஆனால் என்னை பொறுத்தவரையில், நமக்கும் இதுபோன்ற தனிச்சிறப்பு கிடைக்கவில்லையே என்ற உணர்வு இருக்கிறது.



நான் இந்தியாவிற்காக 19 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். ஏராளமான போட்டிகளை இந்தியாவிற்காக வென்று கொடுத்துள்ளேன். இரண்டு உலகக்கோப்பையை வென்றவர்களில் நானும் ஒருவன். ஆகவே, இதுபோன்ற தனிச்சிறப்பு சில வீரர்களுக்கு கிடைகிறது. சில வீரர்களுக்கு கிடைக்கவில்லை. கிடைக்காதவர்கள் பட்டியலில் நானும் ஒருவன். எதற்காக எனக்கு கிடைக்கவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை’’ என்றார்.
Tags:    

Similar News