செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மா திணறுவார்: அசாருதின் சொல்கிறார்

Published On 2017-05-19 16:31 GMT   |   Update On 2017-05-19 16:31 GMT
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடக்க வீரராக களம் இறங்க இருக்கும் ரோகித் சர்மா ரன்குவிக்க திணறுவார் என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் அசாருதின் கூறியுள்ளார்.
இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருபவர் ரோகித் சர்மா. தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் ரோகித் சர்மா 3-வது அல்லது 4-வது இடத்தில் களம் இறங்கி விளையாடி வருகிறார்.

ஐ.பி.எல். தொடர் முடிந்தவுடன் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுகிறது. 50 ஓவர் கொண்ட இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா களம் இறங்குவார். அவருடன் ரகானே அல்லது தவான் களம் இறங்க வாய்ப்புள்ளது.

இந்த தொடரில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கி ரன்கள் குவிக்க திணறுவார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மொகமது அசாருதின் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மொகமது அசாருதின் கூறுகையில் ‘‘நீங்கள் தொடக்க வீரராக இருந்தால், கட்டாயம் தொடக்க வீரராகத்தான் களம் இறங்க வேண்டும். மிகச்சிறந்த வீரர்கள்தான் முதல் 20 ஓவர்களுக்குள் களமிறங்கி விளையாட வேண்டும் என்பதுதான் எப்போதுமே என்னுடைய எண்ணம்.

சிறந்த பேட்ஸ்மேன்கள் டி20 போட்டிகளில் 8 முதல் 10 ஓவர்களுக்குப் பிறகும், 50 ஓவர்கள் போட்டியில் 30 ஓவருக்குப் பிறகும் களம் இறங்கினால், எந்த பயனும் இல்லை. ரோகித் சர்மா சிறந்த வீரர். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் 3-வது அல்லது 4-வது இடத்தில் களம் இறங்குவதை பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆச்சர்யம் அளித்தது.

இரண்டு பயிற்சி ஆட்டங்கள் அவருக்கு உதவிகரமாக இருக்கும். சாம்பியன்ஸ் தொடரில் நேரடியாக தொடக்க வீரராக களம் இறங்குவது அவருக்கு கடினமாக இருக்கும். ஏனென்றால், இங்கிலாந்து சூழ்நிலை மாறுபட்டவை. அத்துடன் காயத்தில் இருந்து மீண்ட பின்னர் களம் இறங்குகிறார். இந்த விஷயம் எல்லாம் அவரது மனதில் ஓடும்’’ என்றார்.
Tags:    

Similar News