செய்திகள்

உள்ளூர் போட்டியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட உமர் அக்மல், ஜூனைத் கானுக்கு அபராதம்

Published On 2017-05-19 13:07 GMT   |   Update On 2017-05-19 13:07 GMT
உள்ளூர் போட்டியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட உமர் அக்மல் மற்றும் ஜூனைத் கான் ஆகியோருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்துள்ளது.
பாகிஸ்தான் சீனியர் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்பவர் உமர் அக்மல். சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான். இவர்கள் இருவரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ‘பாகிஸ்தான் கோப்பை’ தொடரில் விளையாடினார்கள்.

ராவல் பிண்டியில் நடைபெற்ற போட்டியின்போது பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட உமல் அக்மல், ஜூனைத் கான் ஆடும் லெவனில் இடம்பெற்று விளையாடுவார் என்று தெரிவித்தார். ஆனால், அவர் மைதானத்திற்கு வரவில்லை. உடல்நலக்குறைவால் விளையாட வரவில்லை என்று பயிற்சியாளர் மற்றும் மானேஜரிடம் தெரிவித்துவிட்டதாக கூறினார். கேப்டனாகிய என்னிடம் மானேஜர் மற்றும் பயிற்சியாளர் ஜூனைத் கான் வராதது பற்றி கூறியதும் ஆச்சர்யம் அளித்தது என்று உமர் அக்மல் தனது கவலையை தெரிவித்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது.

இந்த பிரச்சினை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விசாரணை முடிவில் இருவருக்கும் போட்டி சம்பளத்தில் 50 சதவிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று சம்பவத்தில் ஈடுபட்டால் ஒரு மாதம் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

உமர் அக்மல் மற்றும் ஜூனைத் கான் ஆகியோர் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News