செய்திகள்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய வீரர்கள் ராம்குமார், குணேஷ்வரன் வெற்றி

Published On 2017-04-07 21:07 GMT   |   Update On 2017-04-07 21:07 GMT
உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசியானா குரூப்-1 இரண்டாவது சுற்றில் இந்திய வீரர்கள் ராம்குமார், குணேஷ்வரன் வெற்றி பெற்றனர்.
பெங்களூரு:

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசியானா குரூப்-1 இரண்டாவது சுற்றில் இந்தியா-உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில் முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார், உஸ்பெகிஸ்தானின் தெமுர் இஸ்மாயிலை எதிர்கொண்டார்.

உலக தர வரிசையில் 267-வது இடத்தில் இருக்கும் ராம்குமார் 6-2, 5-7, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் 406-ம் நிலை வீரர் தெமுர் இஸ்மாயிலை தோற்கடித்து இந்திய அணிக்கு 1-0 என்ற கணக்கில் முன்னிலை தேடிக் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய அறிமுக வீரரும், தரவரிசையில் 287-வது இடம் வகிப்பவருமான பிரஜ்னேஷ் குணேஸ்வரன் (இந்தியா) 7-5, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் சன்ஜர் பைஜிவ்வை சாய்த்தார்.


இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலையை பெற்றுள்ளது. இன்று நடக்கும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஸ்ரீராம் பாலாஜி இணை, உஸ்பெகிஸ்தானின் பரூக் டஸ்டோ-சன்ஜர் பைஜிவ் ஜோடியை எதிர்கொள்கிறது. இதிலும் இந்திய அணி வெற்றி கண்டால், உலக குரூப் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும்.

Similar News