செய்திகள்

மற்ற விருதுகளை விட ஐ.சி.சி. தரவரிசை முக்கியமானது: ஜடேஜா சகோதரி சொல்கிறார்

Published On 2017-03-30 10:47 GMT   |   Update On 2017-03-30 10:47 GMT
ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதை விட ஐ.சி.சி.யின் டெஸ்ட் தரவரிசைதான் முக்கியமானது என்ற ஜடேஜாவின் சகோதரி நைனா சொல்கிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக ரவீந்திர ஜடேஜா தொடர் நாயகன் விருது பெற்றார். மேலும், தரம்சாலா டெஸ்டில் அரைசதம் அடித்ததுடன், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதால் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். அத்துடன் ஐ.சி.சி. தரவரிசையில் முதல் இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஆல்ரவுண்டர் வரிசையில் 2-வது இடத்தில் உள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்த தொடரை இந்தியா வெல்வதில் ஜடேஜாவிற்கு அதிக பங்குள்ளதால் அவர்கள் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அவரது சகோதரி நைனா ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதை விட ஐ.சி.சி. தரவரிசைதான் முக்கியத்தும்வம் வாய்ந்தது எனக் கூறியுள்ளார்.



இதுகுறித்து நைனா கூறுகையில் ‘‘ஜடேஜா ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதை பெற்றது சிறப்பான ஒன்றுதான். ஆனால், பந்து வீச்சாளர் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்ததால் நாங்கள் அதிக சந்தோசம் அடைந்துள்ளோம்.

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் ஒரு தொடருக்குள் அடங்கிவிடும். ஆனால், மற்றொரு வீரர் ஜடேஜாவை பின்னுக்குத் தள்ளும் வரை அவர் தொடர்ந்து பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பார். அவர் நீண்ட நாட்கள் முதல் இடத்தில் இருக்க வாழ்த்துகிறோம்.

ஜடேஜா பேட்டை வாள் சுழற்றுவது போன்று சுற்றுவது ரஜபுத்திரர்களின் ஸ்டைல். இது எங்கள் ரத்தத்துடனும், கலாச்சாரத்துடன் இணைந்தது. நாங்கள் எங்காவது சாதிக்கும்போது (வெற்றி), அந்த சந்தோஷத்தை இதுபோன்ற ஸ்டைலில் வெளிப்படுத்துவோம்.

நாங்கள் மைதானத்தில் இருந்து போட்டியை ரசிக்கும்போது அவருக்கு கூடுதல் நெருக்கடியாக இருக்கும். அதனால் நாங்கள் பொதுவாக ஜடேஜா ஆடும் போட்டியை மைதானத்தில் வந்து நேரில் பார்ப்பது கிடையாது’’ என்றார்.

Similar News