செய்திகள்

புரோ கபடி லீக்கில் மேலும் 4 அணிகள் சேர்ப்பு

Published On 2017-03-30 06:32 GMT   |   Update On 2017-03-30 06:32 GMT
ஐந்தாவது புரோ கபடி லீக் போட்டி ஜூலை 5-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், இப்போட்டியில் மேலும் 4 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
சென்னை:

புரோ கபடி லீக் போட்டி 2014-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இதில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூர் புல்ஸ், தேபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ், பாட்னா பிரேட்ஸ், புனேரி பல்தான், தெலுங்கு டைட்டான்ஸ், யூ மும்பை ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. நகரங்களை அடிப்படையாக கொண்டு இந்த 8 அணிகளும் உருவாக்கப்பட்டன.

2014-ம் ஆண்டு நடந்த புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் அணியும், 2015-ம் ஆண்டு மும்பை அணியும் சாம்பியன் பட்டம் பெற்றன.

கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் நடந்த போட்டிகளில பாட்னா அணி வெற்றி பெற்றது.



புரோ கபடி லீக் போட்டி ரசிகர்கள் ஆதரவை பெரிய அளவில் பெற்றுள்ளது. இதனால் 5-வது புரோ கபடி லீக் போட்டியில் மேலும் 4 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, குஜராத், அரியானா, உத்தர பிரதேசம் ஆகிய 4 அணிகள் புதிதாக இடம் பெற்றுள்ளன. இந்த 4 அணிகளின் விவரம் வருகிற 5-ந்தேதி அறிவிக்கப்படும்.

5-வது புரோ கபடி லீக் போட்டி ஜூலை 5-ந்தேதி தொடங்குகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்கும். மொத்தம் 130 ஆட்டங்கள் 13 வாரம் நடைபெறும்.

புரோ கபடி லீக் போட்டியில் தமிழக அணி இடம் பெற்றுள்ளதால் சென்னையில் இந்த போட்டி நடைபெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் புரோ கபடி லீக் போட்டி நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

Similar News