செய்திகள்

இலங்கையின் வெற்றிக் கனவை தகர்த்த மழை: வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது போட்டி ரத்து

Published On 2017-03-29 10:13 GMT   |   Update On 2017-03-29 10:13 GMT
இலங்கை-வங்காளதேச அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டதால் இலங்கை அணியின் வெற்றிக் கனவு தகர்ந்தது.
கொழும்பு:

இலங்கை சென்றுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் வங்காளதேச அணி வென்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி, தம்புலாவில் நடந்தது. முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு குசால் மெண்டிஸ் (102) சதம் அடித்து கைகொடுக்க, இலங்கை அணி 49.5 ஓவரில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதில் கடைசி ஓவரை வீசிய வங்காளதேச வீரர் தஸ்கின் அஹமது, மூன்றாவது பந்தில் குணரத்னேவை (39) அவுட்டாக்கினார். அடுத்த பந்தில் லக்மலை டக் அவுட்டாக்கினார். பின் ஐந்தாவது பந்தில் பிர்தீப் (0) போல்டாக தஸ்கின் அஹமது ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினார்.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் அரங்கில், சஹாதத் ஹொசைன், அப்துர் ரசாக், ரூபெல் ஹொசைன், தைஜுல் இஸ்லாம் ஆகியோருக்கு பின் இந்த மைல்கல்லை எட்டிய ஐந்தாவது வங்கதேச வீரர் என்ற பெருமை பெற்றார் தஸ்கின் அஹமது.

ஆனால் இதன் பின் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால், அம்பயர்கள் போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தனர். இதனால் இந்த போட்டி முடிவு எட்டப்படவில்லை. இதனால் இலங்கையின் வெற்றிக் கனவு தகர்ந்தது.

தற்போது இத்தொடரில் வங்தேச அணியின் கையே 1-0 என ஓங்கியுள்ளது. இரு அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி வரும் ஏப்ரல் 1-ம் தேதி கொழும்பு மைதானத்தில் நடக்கவுள்ளது. இதில் இலங்கை வென்றாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

Similar News