செய்திகள்

ஆஸ்திரேலியாவின் 451 ரன்கள் குவிப்புக்கு இந்தியா பதிலடி: 2-வது நாள் முடிவில் 120/1

Published On 2017-03-17 11:46 GMT   |   Update On 2017-03-17 11:46 GMT
ராஞ்சி டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் 451 ரன்கள் குவிப்புக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. 2-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரின் சதத்தால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் சேர்த்திருந்தது. ஸ்மித் 117 ரன்னுடனும், மேக்ஸ்வெல் 82 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். மேக்ஸ்வெல் அந்த ஓவரை எதிர்கொண்டார். முதல் பந்திலேயே மேக்ஸ்வெல் பேட் இரண்டாக உடைந்தது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

தனது முதல் சதத்தை பூர்த்தி செய்த மேக்ஸ்வெல் 104 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து விக்கெட் கீப்பர் வடே, ஸ்மித் உடன் ஜோடி சேர்ந்தார். வடே 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கம்மின்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் க்ளீன் போல்டானார்.



மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஸ்மித் 150 ரன்களை தாண்டினார். ஓ'கீபே 25 ரன்கள் எடுத்து அவுட்டாக ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 137.3 ஓவரில் 451 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஸ்மித் 178 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், ஜடேஜா 5 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ராகுல், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். லோகேஷ் ராகுல் மளமளவென ரன்களை சேர்த்தார். அரைசதம் அடித்த ராகுல், கம்மின்ஸின் சடர்ன் பவுன்சரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தது.

2-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் ஆட்டம் முடியும்வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் இந்தியா 2-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 42 ரன்னுடனும், புஜாரா 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.



தற்போது வரை இந்தியா 331 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. ஆடுகளம் இன்னும் மோசமான நிலைக்கு மாறாமல் பேட்டிங் செய்ய அதிக அளவில் ஒத்துழைக்கிறது. இதனால் நாளை முழுவதும் இந்தியா நிலைத்து நின்று 90 ஓவர்கள் விளையாடிவிட்டால், போட்டி பரபரப்பானதாக மாறும்.

Similar News