செய்திகள்

புனே டெஸ்ட்: 2-வது நாள் முடிவில் 298 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் ஆஸி.

Published On 2017-02-24 11:22 GMT   |   Update On 2017-02-24 11:22 GMT
புனே டெஸ்டின் 2-வது நாள் ஆட்ட முடிவில் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து, 298 ரன்களுடன் வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புனேவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 260 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 105 ரன்னில் சுருண்டது.

இதனால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 155 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் வார்னர் 10 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷேன் மார்ஷ் ரன் ஏதும் எடுக்காமலும் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தனர்.

அடுத்து வந்த கேப்டன் ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்குப் பின்னால் வந்த ஹெண்ட்ஸ்காம்ப் 19 ரன்னிலும், ரென்ஷா 31 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.



5-வது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இதனால் ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 59 ரன்னுடனும், மிட்செல் மார்ஷ் 21 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

ஏற்கனவே முதல் இன்னிங்சில் 155 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளதால், ஆஸ்திரேலியா தற்போது வரை 298 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இந்த ஆடுகளத்தில் 300 ரன்கள் எடுப்பது மிகவும் கடினம். இதனால் ஆஸ்திரேலியாவிற்கே இந்த டெஸ்டில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

Similar News