செய்திகள்

பெயர் குழப்பத்தால் ஐ.பி.எல். வாய்ப்பை இழந்த இளம் வீரர்

Published On 2017-02-24 06:30 GMT   |   Update On 2017-02-24 06:30 GMT
பிளாட்பாரத்தில் காரை ஓட்டியதாக வந்த பொய்யான தகவலாலும் பெயர் குழப்பத்தாலும் ஐ.பி.எல். வாய்ப்பை இழந்ததாக ஹர்பீரீத்சிங் தெரிவித்துள்ளார்.
மும்பை:

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ஹர்பீரீத்சிங் (25).

சமீபத்தில் நடந்த சையத் முஷ்தாக் அலி கோப்பை உள்ளூர் 20 ஓவர் போட்டி தொடரில் மத்திய மண்டல அணியில் விளையாடிய ஹர்பீரீத் சிங் 4 ஆட்டத்தில் 211 ரன் குவித்தார்.

தென்மண்டல அணிக்கு எதிராக 52 பந்தில் 92 ரன் எடுத்தார்.

இதனால் ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் தன்னை தேர்வு செய்வார்கள் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் கடந்த 20-ந்தேதி ஏலத்தில் ஹர்பீரீத் சிங்கை அணி உரிமையாளர்கள் யாரும் ஏலம் எடுக்கவில்லை.

ஏலம் நடந்த அன்று காலை மும்பை அந்தேரி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் காரை ஓட்டிய கிரிக்கெட் வீரர் ஹர்மீத்சிங் கைது செய்யப்பட்டார்.

இவர் 19 வயதுக்குட்பட்ட ஜூனியர் உலக கோப்பையில் விளையாடியவர். ஆனால் ரெயில் பிளாட்பாரத்தில் காரை ஓட்டியது மத்திய பிரதேச வீரர் ஹர்பீரீத் சிங் என்று தவறான செய்தி வெளியானது.

மேலும் விபத்து செய்தியில் அவரது புகைப்படமும் தவறாக வெளியிடப்பட்டது. இதனால் அவர் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக நினைத்து ஐ.பி.எல். ஏலத்தில் தேர்வு செய்ய யாரும் முன்வரவில்லை.

இதனால் ஹர்பீரீத்சிங் ஏமாற்றம் அடைந்தார். அவருக்கு மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம் ஆதரவு தெரிவித்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறி உள்ளது.

இதுபற்றி ஹர்பீரீத் சிங் கூறுகையில், நிறைய பேர் எனக்கு போன் செய்து விசாரிக்கிறார்கள். எனக்கு தேவையில்லாமல் கெட்ட பெயர் கிடைத்து உள்ளது.

ஐ.பி.எல். பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் கூகுளில் என்னுடைய பெயரை தேடினால் நான் கைது செய்யப்பட்டு உள்ளேன் என்று வருகிறது என்றார். 

Similar News