செய்திகள்

ஹாமில்டன் டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு 369 ரன்கள் வெற்றி இலக்கு

Published On 2016-11-28 10:32 GMT   |   Update On 2016-11-28 10:32 GMT
ஹாமில்டனில் நடைபெற்று வரும் 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றிக்கு 369 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.
ஹாமில்டன்:

நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 271 ரன் எடுத்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 216 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

55 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து நேற்றைய 3-வதுநாள் ஆட்ட முடிவில் 1 பந்தை மட்டுமே சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் இருந்தது.

இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் லாதம், ராவல் ஆட்டத்தை தொடர்ந்தனர். ராவல் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வில்லியம்சன் 42 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடக்க வீரர் லாதம் சிறப்பாக விளையாடி 80 ரன்கள் சேர்த்தார்.

4-வது வீரராக களம் இறங்கிய ராஸ் டெய்லர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவரது சதத்தால் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. டெய்லர் 102 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

முதல் இன்னிங்சில் 55 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் நியூசிலாந்து அணி ஒட்டுமொத்தமாக 368 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 369 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடினமான இலக்குடன் பாகிஸ்தான் அணியின் சமி அஸ்லாம், அசார் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

3 ஒவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 1 ரன் எடுத்திருக்கும்போது 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நாளை கடைசி நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் 368 ரன்கள் எடுத்து வெற்றி பெறுமா? அல்லது தோல்வியை சந்திக்குமா? என்பது பாகிஸ்தான் வீரர்களின் பேட்டிங்கை பொறுத்துதான் இருக்கிறது.

Similar News