செய்திகள்

பிங்க் பால் டெஸ்ட்: 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸி.

Published On 2016-11-27 10:13 GMT   |   Update On 2016-11-27 10:13 GMT
அடிலெய்டில் நடைபெற்ற பிங்க் பால் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி அடிலெய்டில் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. பிங்க் பந்தில் பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடத்தப்பட்ட இதில் தென்ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

அந்த அணியின் கேப்டன் டு பிளிசிஸ் அவுட்டாகாமல் 118 ரன்கள் எடுக்க 9 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது தென்ஆப்பிரிக்கா. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா கவாஜாவின் (145) அபார சதத்தால் 383 ரன்கள் குவித்தது.

இதனால் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 124 ரன்கள் பின்தங்கியது. 124 ரன்கள் பின்தங்கியதுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது. குக் 81 ரன்னுடனும், டி காக் 0 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆட்டத்தை தொடங்கிய டி காக் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனாலும், குக் நிலைத்து நின்று தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்தார். அவர் 104 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரது சதத்தால் தென்ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சில் 250 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

முதல் இன்னிங்சில் 124 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால் 2-வது இன்னிங்சிஸ் முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 126 ரன்களே முன்னிலைப் பெற்றிருந்தது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 127 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.



3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 127 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வார்னர் 47 ரன்னும், ஸ்மித் 40 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். தொடக்க வீரர் ரென்ஷாவ் 34 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.



இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே முதல் இரண்டு டெஸ்டுகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்ததால் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.

Similar News