செய்திகள்

ஊக்க மருந்து சோதனை: அரியானா ஓட்டப்பந்தய வீரர் தரம்பிர்சிங்குக்கு 8 ஆண்டுகள் தடை

Published On 2016-11-18 03:01 GMT   |   Update On 2016-11-18 03:02 GMT
200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாதனை படைத்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற அரியானா ஓட்டப்பந்தய வீரர் தரம்பிர்சிங் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார். அவருக்கு 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி :

பெங்களூருவில் கடந்த ஜூலை 11-ந் தேதி நடந்த இந்தியன் கிராண்ட்பிரீ தடகள போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் அரியானாவை சேர்ந்த தரம்பிர்சிங் 20.45 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய தேசிய சாதனை படைத்ததுடன், ரியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

தகுதி இலக்கு நேரத்தை விட (20.50 வினாடி) குறைந்த நேரத்தில் பந்தய தூரத்தை கடந்த 27 வயதான தரம்பிர்சிங் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் 200 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க தகுதி பெற்ற இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அவரது தகுதி குறித்து உடனடியாக சந்தேகமும் கிளம்பியது.

இதற்கிடையில் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு கிளம்பும் முன்பு தரம்பிர் சிங் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் இந்திய தடகள அணியில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார். பெங்களூரு போட்டியின் போது தரம்பிர்சிங்கிடம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு கழகம் எடுத்த ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது அம்பலமானது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய தேசிய ஊக்க மருந்து தடுப்பு கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு தரம்பிர்சிங் தடகள போட்டிகளில் பங்கேற்க 8 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இந்த தகவல் இந்திய தடகள சம்மேளனம் மற்றும் உலக ஊக்க மருந்து தடுப்பு கழகம் (வாடா) ஆகியவற்றுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரம்பிர்சிங் ஊக்க மருந்து சோதனையில் மாட்டியது இது முதல் முறையல்ல. 2012-ம் ஆண்டில் நடந்த மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற தரம்பிர்சிங் ஊக்க மருந்து சோதனையை தவிர்த்து தப்பினார். இதனால் அவரது பதக்கம் பறிக்கப்பட்டது. 2-வது முறையாக அவர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் அதிக ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தடையால் தரம்பிர்சிங்கின் தடகள வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

Similar News