செய்திகள்

ஹியூக்ஸ் மறைவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை: விசாரணை அறிக்கையில் தகவல்

Published On 2016-11-05 03:14 GMT   |   Update On 2016-11-05 03:14 GMT
பவுன்சர் பந்து தாக்கியதில் மரணம் அடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் மறைவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை. அவரது மிகச் சிறிய தவறான கணிப்பே காரணம் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் :

கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிட்னி மைதானத்தில் நடந்த ஷெப்பீல்டு ஷீல்டு கோப்பைக்கான உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய 25 வயதான பிலிப் ஹியூக்ஸ், நியூ சவுத்வேல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் வீசிய எகிறி (பவுன்சர்) வந்த பந்தை அடித்து ஆட முயன்ற போது, அது அவரது கழுத்தின் இடது பகுதியில் பயங்கரமாக தாக்கியது. இதனால் நிலைகுலைந்து மைதானத்தில் சரிந்த ஹியூக்ஸ் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தாலும் மயக்க நிலையிலேயே நவம்பர் 27-ந் தேதி அவரது உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் கிரிக்கெட் உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வளரும் நட்சத்திரமாக விளங்கிய பிலிப் ஹியூக்சின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திய நியூ சவுத் வேல்ஸ் மாகாண சிறப்பு அதிகாரி மைக்கேல் பார்ன்ஸ் தனது விசாரணை அறிக்கையை நேற்று வெளியிட்டார். அதில் ‘ஹியூக்ஸ் மரணத்துக்கு போட்டி நடுவர்கள் மற்றும் வீரர்கள் யாரும் காரணம் இல்லை. அந்த போட்டியில் விளையாட்டு விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த நாளில் ஹியூக்சுக்கு 20 பவுன்சர் பந்துகள் வீசப்பட்டு இருக்கிறது. அவர் பவுன்சர் பந்தை திறம்பட சமாளித்து விளையாடக்கூடியவர் தான். மரணத்தை விளைவித்த அந்த பந்தை அவர் குனிந்து தவிர்த்து இருக்கலாம். அவர் அடித்து ஆட முயலுகையில் எதிர்பாராத விதமாக இந்த துயர விபத்து நடந்து விட்டது. மிகச்சிறிய தவறான கணிப்பாலோ? அல்லது பார்வை கவனத்தில் ஏற்பட்ட லேசான பிழையாலோ இந்த பந்து தாக்குதல் சம்பவம் நடந்து இருக்கிறது. யாரும் வேண்டுமென்றே தவறான நோக்கத்துடன் அவருக்கு பந்து வீசவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்பாற்ற மற்றும் நியாயமற்ற பந்து வீச்சுகளை தவிர்க்க நடுவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். கழுத்தை பாதுகாக்கும் வகையிலான உபகரணங்களை கண்டறிந்து அதனை முதல் தர போட்டியில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திடீரென விபத்து நேர்ந்தால் அதனை சிறப்பாக கையாள்வது குறித்து நடுவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மைதானத்தில் போதிய மருத்துவ வசதிகள் தயாராக இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட சில பரிந்துரைகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அமல்படுத்த வேண்டும் என்று விசாரணை அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஹியூக்ஸ் மரணத்துக்கான விசாரணை அறிக்கையின் முடிவை ஹியூக்ஸ் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளனர். அத்துடன் பார்ன்ஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரைவில் செயல்படுத்த வேண்டும். எங்களது குடும்பத்துக்கு நேர்ந்தது போன்ற சோக சம்பவம் வேறு எந்த வீரருக்கும் நடக்காத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சுதர்லேண்ட் கருத்து தெரிவிக்கையில், ‘எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடக்காதவாறு பார்த்து கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க விரும்புகிறோம்’ என்றார்.

Similar News