செய்திகள்

டோனியே சிறந்த கேப்டன் கிர்ஸ்டன் சொல்கிறார்

Published On 2016-11-02 06:51 GMT   |   Update On 2016-11-02 06:51 GMT
டோனியே சிறந்த கேப்டன், ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்க நினைப்பது மிகப்பெரிய தவறு என்று முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கூறியுள்ளார்.

மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனாக திகழ்பவர் டோனி.

2007 ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் போது அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். சர்வதேச போட்டியில் அறிமுகமான இரண்டே ஆண்டில் டோனிக்கு இந்த பொறுப்பு கிடைத்தது.

இதில் உலக கோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இதை தொடர்ந்து ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்டுக்கு கேப்டன் ஆனார். இதில் 2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பையை (50 ஓவர்) வென்று டோனி முத்திரை பதித்தார்.

28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வென்று பெருமை சேர்த்தார். மேலும் டெஸ்ட் அணியை ‘நம்பர்-1’ இடத்துக்கு கொண்டு சென்றார்.

3 நிலைக்கும் கேப்டனாக இருந்த டோனி 2014-ம் ஆண்டு இறுதியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதனால் டெஸ்ட் அணிக்கு வீராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிக்கு கேப்டனாக நீடித்து வந்தார்.

வீராட் கோலியின் தலைமையில் இந்திய அணி டெஸ்டில் சிறப்பாக வெற்றிகளை பெற்றதால் அவரது புகழ் அதிகரிக்க தொடங்கியது.

இதனால் 2019 உலக கோப்பைபோட்டியில் வீராட் கோலியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னாள் வீரர்கள் சிலர் வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை டோனி 3-2 என்ற கணக்கில் வென்றதால் நெருக்கடியில் இருந்து தப்பினார்.

2019-ம் ஆண்டு உலக கோப்பை வரை அவர் விளையாடுவாரா? என்பது பற்றி ஜூன் மாதம் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு பிறகு முடிவு செய்வார்.

உலக கோப்பை வரை டோனி விளையாட முன்னாள் வீரர்கள் சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் டோனியே சிறந்த கேப்டன், ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்க நினைப்பது மிகப்பெரிய தவறு என்று முன்னாள் பயிற்சியாளரும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வருமான கேரி கிர்ஸ்டன் கூறியுள்ளார்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

கேப்டன் பதவியில் டோனிக்கு மாற்று என்று நினைத்தால் அது ஆபத்தாக அமையும். ஏனென்றால் அவர் மிகுந்த அனுபவம் வாய்ந்த வீரர். சிறந்த கேப்டன். அதோடு ஆட்டத் திறனிலும் வல்லவர்.

அவரது விருப்பத்துக்கு ஏற்ற வகையில் நடந்து கொள்ள வேண்டும். அவர் போக வேண்டும் என்று நினைத்தால் 2019 உலக கோப்பையை இந்தியா வெல்வதற்கான ஆற்றலை இழக்கலாம்.

ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குவதன் மூலம் இந்தியா மிகப்பெரிய தவறு செய்ய முடியும்.

2019 உலக கோப்பையில் டோனி இடம் பெறுவாரா? மாட்டாரா? என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது.

டோனி ஒரு சிறந்த பேட்ஸ்மேன். ஆட்டத்தை நிறைவு செய்வதில் அவர் அதே திறமையுடன்தான் இருக்கிறார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரது திறமை குறித்து கேள்வி எழுப்புவது மிகப்பெரிய தவறு.

இவ்வாறு கேரி கிர்ஸ்டன் கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க முன்னாள் தொடக்க வீரரான அவர் பயிற்சியாளராக இருந்த போதுதான் இந்தியா 2011 உலக கோப்பையை கைப்பற்றியது.

டோனி - கிர்ஸ்டன் வெற்றி கூட்டணியாக இந்திய கிரிக்கெட்டில் முத்திரை பதித்தனர்.

Similar News