செய்திகள்

38 வயதில் இலங்கை அணியின் கேப்டனாக அறிமுகமாகும் ரங்கனா ஹெராத்

Published On 2016-10-24 13:31 GMT   |   Update On 2016-10-24 13:31 GMT
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் 38 வயதில் இலங்கை அணியின் கேப்டனாக அறிமுகமாக உள்ளார்.
இலங்கை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத். 38 வயதாகும் இவர், டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்துவதற்காக கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். சமீபத்தில் ஆஸ்திரேலியா அணி இலங்கை சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது ஆஸ்திரேலியாவை இலங்கை அணி 3-0 என வீழ்த்துவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். ஹெராத் இந்த தொடரில் 6 இன்னிங்சில் 28 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்.

இலங்கை அணி தற்போது ஜிம்பாப்வே சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இலங்கை அணியின் கேப்டனாக ஏஞ்சலோ மேத்யூஸ் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

இவருக்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது காயம் ஏற்பட்டது. அவரது காயம் குணமடைய இன்னும் மூன்று வாரங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜிம்பாப்வே தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.

துணை கேப்டனாக செயல்பட்டு வந்த சண்டிமாலுக்கு உள்ளூர் தொடரின்போது பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரும் ஓய்வில் இருக்கிறார். ஆகவே, ஹெராத் இலங்கை அணியின் கேப்டனாக இருக்கிறார். 29-ந்தேதி ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் டெஸ்டில் கேப்டனாக அறிமுகமாவதன் மூலம் அதிக வயதில் கேப்டன் பதவியை ஏற்கும் வீரர் என்ற பெருமையை பெற இருக்கிறார். இதற்கு முன் சோமசந்திரா டி சில்வா 1983-ல் அதிக வயதில் கேப்டன் பொறுப்பை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

1999-ம் ஆண்டு இலங்கை அணியில் அறிமுகமான ஹெராத், 74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், 71 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

Similar News