செய்திகள்

உலகக்கோப்பை கபடி: ஈரானை 38-29 என வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் சாம்பியன்

Published On 2016-10-22 16:02 GMT   |   Update On 2016-10-22 16:02 GMT
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கபடி போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகக்கோப்பை கபடி போட்டி கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. லீக் போட்டி மற்றும் அரையிறுதிப் போட்டிகளுக்குப் பிறகு இந்தியா, ஈரான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இன்று இரவு 7.55 மணிக்கு தொடங்கிய இறுதிப் போட்டியில் இந்தியா - ஈரான் பலப்பரீட்சை நடத்தின. கபடியில் கில்லாடியாக விளங்கும் இந்தியாவிற்கு ஈரான் கடும் நெருக்கடி கொடுத்தது. தொடக்கத்தில் இந்தியா முன்னிலை பெற்றிருந்தது. அதன்பின் ஈரான் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இதனால் முதல் பாதி நேரமான 20 நிமிடம் முடிவில் ஈரான் 18-13 என முன்னிலைப் பெற்றது.

ஐந்து நிமிட இடைவேளைக்குப்பின் 2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியது. சைடு மாறிய பின்னர் இந்தியா வீரர்களின் ஆட்டத்தில் அனல் பறந்தது. ரைடு மற்றும் கேட்சிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் இந்திய அணி மளமளவென புள்ளிகள் பெற்றது.

இறுதியில் இந்தியா 38-29 என்ற அடிப்படையில் 9 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஈரானை இந்தியா இரண்டு முறையும், இந்தியாவை ஈரான் ஒரு முறையும் ஆல்அவுட் செய்தது.

Similar News