செய்திகள்

மனைவி தற்கொலை வழக்கில் கபடி வீரர் ரோகித் குமார் கைது: சரண் அடைந்த மாமனாருக்கு நீதிமன்றக் காவல்

Published On 2016-10-21 13:50 GMT   |   Update On 2016-10-21 13:50 GMT
மனைவி தற்கொலை வழக்கில் தேசிய கபடி வீரர் ரோகித் குமார் கைது செய்யப்பட்டார். சரண் அடைந்த மாமனார் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

தேசிய அளவிலான கபடி போட்டிகளில் விளையாடிவரும் வீரரான ரோஹித் குமார் கடந்த ஆறுமாதங்களுக்கு முன்னர் லலிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த இளம்தம்பதியர் மேற்கு டெல்லியில் உள்ள நங்லோய் பகுதியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், லலிதா கடந்த சில தினங்களுக்கு முன் அதே பகுதியில் உள்ள தன் பெற்றோர் வீட்டில் பிணமாக தொங்கினார். இதுதொடர்பான தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார், லலிதாவின் பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் எழுதி வைத்திருந்த தற்கொலை குறிப்பையும் கைப்பற்றினர்.

அதில், தன்னை மாமனார் வீட்டில் சிறிய பிரச்சனையைக்கூட பெரிதுபடுத்தி தொந்தரவு கொடுத்ததாக லலிதா கூறியிருந்தார். மேலும், தன் வாழ்க்கையில் இருந்து சென்றுவிடும்படி கணவர் ரோகித் கூறியதாகவும் அந்த தற்கொலைக் குறிப்பில் கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாமனார் விஜய் சிங், கணவர் ரோகித் குமார் ஆகியோரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நங்லோய் காவல் நிலையத்தில் ரோகித்தின் தந்தை விஜய் சிங் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதேசமயம், ரோகித் குமார் இன்று மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்படுகிறார்.

ரோகித்தின் தந்தை விஜய் சிங் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர். ரோகித் குமார் கடற்படையில் உள்ளார்.

Similar News