செய்திகள்

ஐ.பி.எல். மீடியா உரிமை: விண்ணப்பங்கள் வாங்கிய டுவிட்டர், பேஸ்புக் நிறுவனம்

Published On 2016-10-18 16:22 GMT   |   Update On 2016-10-18 16:22 GMT
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒளிப்பரப்புவதற்கான மீடியா உரிமை விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை டுவிட்டர், பேஸ்புக் நிறுவனங்கள் வாங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008-ம் தொழில்முறை கிரிக்கெட்டான ஐ.பி.எல். (இந்தியன் பிரிமீயர் லீக்) தொடர் ஆரம்பிக்கப்பட்டது. இந்த தொடருக்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது.

இதனால் பி.சி.சி.ஐ.-க்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்தது. அத்துடன் வீரர்களும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். பெரும்புகழ் பெற்ற ஐ.பி.எல். தொடரை சோனி மேக்ஸ் நேரடியாக ஒளிபரப்பு செய்து வந்தது.

அடுத்த வருடத்துடன் இந்த ஒப்பந்தம் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து தங்களது ஒப்பந்தத்தை நீட்டிக்க அந்நிறுவனம் கேட்டுக்கொண்டது. ஆனால், பி.சி.சி.ஐ. அதற்கு சம்மதம் தெரிவிக்காமல், விண்ணப்பங்கள் பெற்று டெண்டர் மூலம் மீடியா உரிமம் வழங்க முடிவு செய்தது.

அதன்படி விண்ணப்பங்களை விற்கும் பணியில் பி.சி.சி.ஐ. களம் இறங்கியது. டி.வி. ஒளிபரப்பு, டிஜிட்டல் மற்றும் மொபைல் ஆகியவற்றின் மூலம் ஐ.பி.எல். தொடரை ஒளிபரப்ப விரும்பும் நிறுவனங்கள் செப்டம்பர் 19-ந்தேதி முதல் அக்டோபர் 18 (இன்று) வரை விண்ணப்பங்களை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவித்தது.

விண்ணப்பம் பெற கடைசி நாள் இன்று என்பதால் யார் யாரெல்லாம் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர் என்ற விவரத்தை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் உலக அளவில் சமூக வலைத்தளங்களில் கொடிகட்டிப் பறக்கும் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்களும் விண்ணப்பங்களை பெற்றுள்ளன. இவர்களுடன் ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட், சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் பிரைவெட் லிமிலெட், ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் சர்வீசஸ் பிரைவெட் லிமிடெட் உள்பட 18 நிறுவனங்கள் விண்ணப்பங்களை பெற்றுள்ளன.

இந்நிறுவனங்கள் வரும் 25-ந்தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் டெண்டர் மூலம் தகுதியான நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படும்.

ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம் இந்திய துணைக் கண்டத்தில் டெலிவிஷன் உரிமம் 2018 முதல் 2027 வரை 10 வருடங்களுக்கும், டிஜிட்டல் உரிமம் 2018 முதல் 2022 வரை ஐந்து வருடத்திற்கும், துணைக்கண்டத்தை தவிர உலகின் மற்ற பகுதிகளுக்கான மீடியா உரிமம் 2018 முதல் 2022 வரை ஐந்து வருடத்திற்கும் வழங்கப்பட இருக்கிறது.

Similar News