செய்திகள்

ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் ஆக்ரோஷமாக ஆடுவோம்: இந்திய வீரர் ரஹானே பேட்டி

Published On 2016-10-15 03:05 GMT   |   Update On 2016-10-15 03:05 GMT
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் ஆக்ரோஷமாக ஆடுவோம் என்று இந்திய வீரர் ரஹானே கூறியுள்ளார்.
தரம்சாலா:

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் தரம்சாலாவில் நாளை (பகல் 1.30 மணி) நடக்கிறது. இதையொட்டி நேற்று பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர் ரஹானே பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு அந்த தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றினோம். அடுத்து ஒரு நாள் தொடரையும் வெற்றியோடு தொடங்குவதில் ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறோம். முழு உத்வேகத்தை எடுத்துச் செல்ல முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம்.

எல்லா நேரமும் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். எனவே ஒரு நாள் தொடரிலும் எங்களது ஆக்ரோஷமான அணுகுமுறை தொடரும். எதிரணியின் பலம், பலவீனம் என்ன என்பதில் கவனம் செலுத்துவதை விட, எங்களது பலத்துக்கு தகுந்தபடி விளையாடுவோம்.

எங்களது அணி தற்போது நல்ல நிலைமையில் இருக்கிறது. உள்ளூர் போட்டியில் அசத்திய சில இளம் வீரர்களும் அணியில் இருக்கிறார்கள். இந்த தொடரிலும் சாதிக்கும் முனைப்புடன் உள்ளேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஒரு நாள் போட்டிக்கு ஏற்ப மாறுவது குறித்து கேட்கிறீர்கள். இது முற்றிலும் உங்களது மனஉறுதி சம்பந்தப்பட்டது. நாங்கள் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள். ஒரு வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து இன்னொரு வடிவிலான கிரிக்கெட்டுக்கு ஏற்ப எப்படி மாற்றிக்கொள்வது என்பது தெரியும். எனது இயல்பான ஆட்டத்தின் மீது கவனம் செலுத்த முயற்சிக்கிறேன். அது தான் எனது பலம்.

இவ்வாறு ரஹானே கூறினார்.

Similar News