செய்திகள்

தாயார் உடல்நலம் மோசமானதால் அபுதாபியில் இருந்து பாகிஸ்தான் திரும்பினார் மொகமது ஆமிர்

Published On 2016-10-05 09:47 GMT   |   Update On 2016-10-05 09:47 GMT
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமிரின் தாயார் உடல்நிலை சரியில்லாததால், அவர் உடனடியாக அபுதாபியில் இருந்து பாகிஸ்தான் திரும்பியுள்ளார்.
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளான ஷார்ஜா மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே முடிந்துள்ள இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என முன்னிலை வகிக்கிறது. இன்று 3-வது மற்றும் கடைசி போட்டி அபுதாபியில் நடைபெற இருக்கிறது.

பாகிஸ்தான் அணியில் 24 வயதான மொகமது ஆமிர் இடம்பிடித்துள்ளார். நேற்று அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அவரது தாயார் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக பாகிஸ்தான் திரும்பியுள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறுகையில் ‘‘மொகமது ஆமிரின் தாயார் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் அணி நிர்வாகம் அவரை பாகிஸ்தான் செல்ல அனுமதித்துள்ளது’’ என்று கூறியுள்ளது.

முதல் இரண்டு போட்டிகளிலும் ஆமிர் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் அக்டோபர் 13-ந்தேதி துபாயில் பகல்-இரவு டெஸ்டாக பிங்க் பந்தில் நடக்கிறது. இதில் ஆமீர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணியில் ரஹத் அலி மற்றும் சோஹைல் கான் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் ஏற்கனவே இடம்பிடித்துள்ளதால், இன்றைய போட்டியில் இருவர்களில் ஒருவர் ஆமிருக்காக களம் இறக்கப்படுவார்.

Similar News