செய்திகள்

இந்திய டெஸ்ட் வீரர்களின் சம்பளம் ரூ. 15 லட்சம்: இரண்டு மடங்காக உயர்வு

Published On 2016-10-01 10:11 GMT   |   Update On 2016-10-01 10:11 GMT
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் ரூ. 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன் சுமார் 7 லட்சம் ரூபாய்தான் ஒரு வீரர் வாங்கிக் கொண்டிருந்தார்.
சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறைந்து கொண்டு வருகிறது. ரசிகர்களுக்கு மட்டுமல்ல. வீரர்களுக்கும்தான். தற்போது டி20 லீக் தொடர் பிரபலம் அடைந்துள்ளதால் அனைத்து வீரர்களும் அதன்மீது ஆர்வம் காட்டியுள்ளனர். அதிக உழைப்பு மற்றும் திறமையை வெளிக்காட்டாமல் குறிப்பிட்ட சில நாட்களில் கோடிக் கணக்கில் பணத்தை அள்ளி விடுகிறார்கள்.

இதனால் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வம் வீரர்களுக்கு குறைந்து வருகிறது. ஐந்து நாட்களை கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தற்போது முழுவதுமாக நடைபெறுவதில்லை. ஐந்து நாட்களுக்கு முன்பே வீரர்கள் தங்கள் விக்கெட்டுக்களை இழந்து விடுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் டெஸ்ட் கிரிக்கெட் மீது அக்கறை செலுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பகல் - இரவு போட்டிகளுக்கு மாற உள்ளது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் மீது ஆர்வம் செலுத்த வேண்டும் என்ற நோக்கில் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது. இதற்கு முன் இந்திய வீரர்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட சுமார் 7 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்றிருந்தனர். தற்போது அந்த சம்பளம் 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

லேதா கமிட்டி பரிந்துரையை நிறைவேற்றுவதற்காக கூட்டப்பட்ட பி.சி.சி.ஐ.யின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணி தற்போதைய சீசனில் இந்தியாவில் 13 டெஸ்ட் போட்டிகள் விளையாட இருக்கிறது. 13 போட்டிகளிலும் பங்கேற்கும் வீரர்கள் சுமார் 2 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவார்கள்.

Similar News