செய்திகள்

கொலை வழக்கில் தேசிய தடகள விளையாட்டு வீரர் கைது

Published On 2016-09-30 12:28 GMT   |   Update On 2016-09-30 12:29 GMT
டெல்லியில் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட தேசிய தடகள விளையாட்டு வீரர் ஒரு ஆண்டுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

டெல்லி ஜரோதா காலன் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (வயது 29). குண்டு எறிதல் வீரரான இவர் தேசிய அளவிலான போட்டிகளில் இரண்டு முறை பங்கேற்றுள்ளார். ஆனால், விளையாட்டுத்துறையில் இருந்து பாதை மாறிய அவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடத் தொடங்கினார்.

இந்நிலையில், கொலை வழக்கில் கடந்த ஓராண்டு காலமாக தேடப்பட்டு வந்த தீபக் நேற்று அவரது வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரைக் கைது செய்தனர்.

இதுபற்றி தென்மேற்கு துணை கமிஷனர் கூறும்போது, “கடந்த ஆண்டு கஞ்சாவ்லா பகுதியில் அமித் என்பவர் தீபக்கின் நண்பரிடம் கொடுத்த பணத்தை கேட்டபோது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது தீபக் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து அமித்தை சுட்டுக்கொன்றுள்ளனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர். தீபக் கடந்த ஆண்டு மே மாதம் முதல் தலைமறைவாக இருந்தார்.

இப்போது அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம். விசாரணையின்போது, மிகப்பெரிய தாதா ஆக வேண்டும் என்பதற்காக குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தீபக் தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது” என்றார்.

Similar News