செய்திகள்

சொந்த ஊரில் நடந்த பாராட்டு விழாவில் தங்கமகன் மாரியப்பன் தபால்தலை வெளியீடு

Published On 2016-09-25 01:59 GMT   |   Update On 2016-09-25 01:59 GMT
சொந்த ஊர் திரும்பிய பாரா ஒலிம்பிக் ‘ஹீரோ’ மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாராட்டு விழாவில், அவரது புகைப்படம் அடங்கிய தபால்தலை வெளியிடப்பட்டது.
சொந்த ஊர் திரும்பிய பாரா ஒலிம்பிக் ‘ஹீரோ’ மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாராட்டு விழாவில், அவரது புகைப்படம் அடங்கிய தபால்தலை வெளியிடப்பட்டது.

பிரேசிலில் சமீபத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டியில் இந்திய உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கி புதிய வரலாறு படைத்தார்.

‘தங்கமகன்’ மாரியப்பன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள பெரிய வடகம்பட்டி கிராமத்துக்கு நேற்று திரும்பினார். இதையொட்டி மாவட்ட எல்லையான தொப்பூரில் கலெக்டர் சம்பத் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் அவரை வரவேற்றார்.

தாய் சரோஜா, சகோதரர்கள் குமார், கோபி, அக்கா சுதா மற்றும் உறவினர்கள் அவரை கட்டித் தழுவி உணர்வு பூர்வமான மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பின்னர் வேனில் ஊர்வலமாக சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்ட மாரியப்பனுக்கு, கிராமத்தினர் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் ஆரவாரமான வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து பெரிய வடகம்பட்டியில் மாரியப்பனுக்கு பாராட்டு விழா நடந்தது. அங்கு இந்திய அஞ்சல்துறை சார்பில் ‘தங்கமகன்’ மாரியப்பனின் புகைப்படம் அடங்கிய தபால் தலையை(மை-ஸ்டாம்ப்) வெளியிட்டு அஞ்சல்துறை அதிகாரிகள் அவரை கவுரவித்தனர். மேலும் சேலம் சூரமங்கலம் தபால் நிலையத்திற்கு ஏற்கனவே மாரியப்பனுக்கு வந்திருந்த 20 ஆயிரம் வாழ்த்து கடிதங்களையும் அவரிடம் நேரில் வழங்கினர்.

பாராட்டு மழையால் நெகிழ்ந்து போன மாரியப்பன் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும், நான் பிறந்த ஊரான பெரியவடகம்பட்டி கிராமத்திற்கும் பெருமை சேர்த்திருப்பதை எண்ணி மிகவும் பெருமை அடைகிறேன். 2020-ம் ஆண்டு நடக்க உள்ள பாரா ஒலிம்பிக் போட்டியிலும் இதே போல் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே என் லட்சியம். தற்போது 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்று உள்ளேன். அடுத்ததாக 2.10 மீட்டர் உயரம் தாண்டுவதே என் இலக்கு.

எனக்கு உற்சாகமும், ஊக்கமும் கொடுத்ததுடன் எனது அனைத்து முயற்சிக்கும் வித்திட்டவர் என் தாய் சரோஜாதான். நான் பெற்ற தங்கப்பதக்கத்தை என் தாயாருக்கு சமர்ப்பிக்கிறேன்’ என்றார்.

Similar News