செய்திகள்

லண்டன் ஒலிம்பிக்கில் யோகேஷ்வர் பெற்ற வெண்கலம் வெள்ளி பதக்கமாகிறது - ரஷிய வீரர் ஊக்க மருந்தில் சிக்கியதால் வாய்ப்பு

Published On 2016-08-30 06:39 GMT   |   Update On 2016-08-30 06:39 GMT
2012-ல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ரஷிய வீரர் ஊக்க மருந்தில் சிக்கியதால் அந்த பிரிவில் வெண்கலம் வென்று இருந்த யோகேஷ்வர் தத் வெள்ளிப்பதக்கத்தை பெறுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சர்வதேச மல்யுத்த சங்கமும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் அறிவிக்கும்.
புதுடெல்லி:

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களின் ஒருவர் யோகேஷ்வர் தத். 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 60 கிலோ பிரிவில் இவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்த நிலையில் யோகேஷ்வர் தத் பெற்ற வெண்கலப் பதக்கம் வெள்ளிப்பதக்கமாக மாறுகிறது. லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 60 கிலோ மல்யுத்த பிரிவில் ரஷிய வீரர் பெசிக் குடுகோவ் வெள்ளிப்பதக்கம் பெற்று இருந்தார். 2013-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த விபத்தில் அவர் உயிர் இழந்தார்.

இதற்கிடையே அவர் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது பதக்கம் பறிக்கப்படுகிறது.

இதனால் அந்த பிரிவில் வெண்கலம் வென்று இருந்த யோகேஷ்வர் தத் வெள்ளிப்பதக்கத்தை பெறுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சர்வதேச மல்யுத்த சங்கமும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் அறிவிக்கும்.

தற்போது நடைபெற்று முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் யோகேஷ்வர் தத் 66 கிலோ பிரிவில் பங்கேற்று முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

Similar News