செய்திகள்

புளோரி்டா டி20: இந்தியாவின் வெற்றிக்கு 246 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

Published On 2016-08-27 15:47 GMT   |   Update On 2016-08-27 15:47 GMT
புளோரிடாவில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 245 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி புளோரிடாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜான்சன் சார்லஸ், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மொகமது சமி முதல் ஓவரை வீசினார். ஆட்டத்தின் 2-வது பந்தை சார்லஸ் சிக்சருக்கு தூக்கி அதிரடி வேட்டையை தொடக்கி வைத்தார். அந்த ஓவரில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ரன்கள் சேர்த்தது.

பும்ப்ரா வீசிய ஐந்தாவது ஓவரில் இரண்டு சிக்சர்களுடன் 18 ரன்கள் குவித்தது. அஸ்வின் வீசிய 6-வது ஓவரில் சார்லஸ் இரண்டு சிக்சர்கள் விளாசி 21 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் அரைசதம் அடித்தார். ஜடேஜா வீசிய 7-வது ஓவரில் லெவிஸ் இரண்டு சிக்சர்கள் விளாசினார். ஜடேஜா வீசிய 9-வது ஓவரில் சார்லஸ் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். அந்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 20 ரன்கள் கிடைத்தது.

மொகமது ஷமி வீசிய 10-வது ஓவரில் சார்லஸ் அவுட் ஆனார். அவர் 33 பந்தில் 6 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 79 ரன்கள் குவித்தார். அடுத்து ரஸல் களம் இறங்கினார். 10-வது ஓவரின் 5-வது பந்தில் பவுண்டரி அடித்த லெவிஸ் அரைசதம் அடித்தார்.

11-வது ஓவரை ஸ்டூவர்ட் பின்னி வீசினார். இந்த ஓவரில் லெவிஸ் ஐந்து சிக்சர்கள் விளாசினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒரே ஓவரில் 32 ரன்கள் கிடைத்தது. அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 11 ஓவர்கள் முடிவில் 164 ரன்கள் குவித்தது.

அதன்பின் வெஸ்ட் இண்டீசின் ரன் ரேட் சற்று சரிந்தது. இருந்தாலும் சராசரியாக ஒரு ஓவருக்கு தலா ஒரு சிக்ஸ் விளாசிக் கொண்டே இருந்தனர்.

ஜடேஜா வீசிய 16-வது ஓவர் இந்தியாவிற்கு திருப்பு முனையாக இருந்தது. முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தன் மூலம் லெவின் 48 பந்துகளை சந்தித்து சதம் அடித்தார். தான் களம் இறங்கிய 2-வது சர்வதேச போட்டியில் இந்த சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் ஆடிய ரஸல் 12 பந்தில் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அதே ஓவரில் 100 ரன்களுடன் லெவிஸ் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 49 பந்தில் 5 பவுண்டரிகள், 9 சிக்சர்களுடன் இந்த ரன்னை எடுத்தார்.

அடுத்து பொல்லார்டு உடன் கேப்டன் பிராத்வைட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியால் அதிரடியாக விளையாட முடியவில்லை. இதனால் ஸ்கோர் அப்படியே குறைந்தது. என்றாலும் 200 ரன்னைத் தாண்டியது. பும்ப்ரா வீசிய கடைசி ஓவரில் 3 விக்கெட்டுக்கள் விழ வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்துள்ளது. இந்த அணி சார்பில் ஜடேஜா, பும்ப்ரா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். மொகமது சமி 4 ஓவரில் 48 ரன்னும், புவனேஸ்வர் குமார் 4 ஓவரில் 43 ரன்னும், அஸ்வின் 4 ஓவரில் 36 ரன்னும், ஜடேஜா 3 ஓவரில் 39 ரன்னும், பின்னி 1 ஓவரில் 32 ரன்னும் விட்டுக்கொடுத்தனர்.

இந்தியா 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சேஸிங் செய்து வருகிறது.

Similar News