செய்திகள்

2-வது ஒருநாள் போட்டி: சர்பிராஸ் அஹமது சதத்தால் இங்கிலாந்துக்கு 252 ரன்கள் வெற்றி இலக்கு

Published On 2016-08-27 13:51 GMT   |   Update On 2016-08-27 13:51 GMT
இங்கிலாந்து அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் சர்பிராஸ் அஹமது சதம் அடித்தார். இதனால் இங்கிலாந்துக்கு 252 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் சமி அஸ்லாம் ஷர்ஜீல் கான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சமி அஸ்லாம் 1 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஷர்ஜீல் கான், அவரைத் தொடர்ந்து அடுத்து வந்த கேப்டன் அசார் அலி ஆகியோர் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்கள். இதனால் பாகிஸ்தான் அணி 2 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

4-வது விக்கெட்டுக்கு பாபர் அசாம் உடன் விக்கெட் கீப்பர் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு ரன்கள் சேர்த்தது. 4-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. பாபர் அசாம் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த சோயிப் மாலிக் 28 ரன்கள் எடுக்க சர்பிராஸ் கான் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 130 பந்தில் 6 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் சேர்த்தார். இமாத் வாசிம் அவுட்டாகாமல் 70 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 63 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி 49.5 ஓவரில் 251 ரன்கள் எடுத்து ஆல் அவட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் வுட், வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்களும், பிளங்கெட் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் இங்கிலாந்து அணி 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

Similar News