செய்திகள்

ஸ்மித் அதிரடி சதம்: குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் 195 ரன்கள் குவித்தது புனே அணி

Published On 2016-04-29 16:29 GMT   |   Update On 2016-04-29 16:29 GMT
ஐ.பி.எல். தொடரில், ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடியான சதத்தால் குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் புனே 195 ரன்கள் குவித்துள்ளது.
புனே:

ஐ.பி.எல். தொடரின் இன்றையை லீக் போட்டியில் ரெய்னாவின் குஜராத் லயன்ஸ் அணியும், தோனியின் புனே அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

ரகானேவும், திவாரியும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஒரு ரன்னில் திவாரி எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆக, ரகானேவுடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். ரகானே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஸ்மித் அதிரடியாக விளையாடினார்.

ஸ்மித் 29 பந்துகளில் அரைசதம் விளாச, 43 பந்துகளில் ரகானே அரைசதம் கடந்தார். இருப்பினும் பிராவோவின் அற்புதமான துரோவால் ரகானே 53(45) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது 13.4 ஓவர்களில் புனே அணி 124 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து ஸ்மித்துடன் கேப்டன் தோனி இணைந்தார். இருவரும் குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய ஸ்மித் 19.2-வது ஓவரில் 53 பந்துகளில் சதம் அடித்தார். இருப்பினும் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். ஸ்மித் 54 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். அதில், 5 சிக்ஸர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும்.

இறுதியில் புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. கேப்டன் தோனி 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 2 சிக்ஸர்களும், 2 பவுண்டர்களும் அடங்கும். பெரேரா 3 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இதனை தொடர்ந்து குஜராத் அணி 196 ரன்கள் என்ற இலக்கை கொண்டு விளையாடி வருகிறது.

Similar News