இந்தியா

பினராயி விஜயனுக்கு எதிராக விமானத்திற்குள் காங்கிரசார் போராட்டம்

பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தல்- போராட்டத்தை தீவிரப்படுத்தும் இளைஞர் காங்கிரஸ்

Published On 2022-06-14 01:24 GMT   |   Update On 2022-06-14 01:38 GMT
  • காரில் சென்ற பினராயி விஜயனுக்கு கருப்பு கொடி காட்டி இளைஞர் காங்கிரசார் போராட்டம்.
  • பினராயி விஜயன் பதவி விலக கோரி விமானத்திற்குள் போராட்டம்

கன்னூர்:

கேரள மாநிலத்தில் தங்க கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே உள்ள ஸ்வப்னா சுரேஷ், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ,இதில் தொடர்பு இருப்பதாக புகார் தெரிவித்தார். இது குறித்து நீதிமன்றத்தில் அளித்த ரகசிய வாக்குமூலத்திலும் தெரிவித்து உள்ளதாக அவர் கூறினார்

ஸ்வப்னாவின் இந்த குற்றச்சாட்டு காரணமாக பினராய் விஜயன் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அம்மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ், பாஜக மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பினராயி விஜயன், தனது சொந்த ஊரான கண்ணூரிலிருந்து நேற்று திருவனந்தபுரத்துத்திற்கு விமானம் மூலம் பயணம் செய்தார். இதற்காக கார் மூலம் அவர் விமான நிலையத்திற்கு சென்ற போது வழி நெடுகிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

அப்போது திடீரென ஒரு தெருவுக்குள் இருந்து ஓடி வந்த இளைஞர் காங்கிரசார் பினராயி விஜயனுக்கு கருப்புக் கொடி காட்டி கோஷமிட்டனர். உடனடியாக விரைந்து வந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். 

இதை அடுத்து விமானத்திற்குள் சென்று பினராயி விஜயன் அமர்ந்திருந்த நிலையில், உள்ளே இருந்த இளைஞர் காங்கிரஸ் மாவட்டச் செயலர் நவீன்குமார், தொகுதித் தலைவர் பர்தீன் மஜீத் ஆகியோர் அவரை ராஜினாமா செய்யக் கோரி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த பினராயி விஜயன் ஆதரவாளர் அவர்களை கீழே தள்ளி விட்டார். இது குறித்து வீடியோ சமூக வளைதளங்களில் வைரலானது. பின்னர் இருவரையும் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

மேலும் பினராயி விஜயன் விமான நிலையத்திலிருந்து வெளியேறியபோது, அங்கு காத்திருந்த காங்கிரஸ் மற்றும் பாஜக இளைஞரணித் தொண்டர்கள் கருப்புக் கொடிக் காட்டினர். பினராயி விஜயன் செல்லும் இடமெல்லாம் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துவது கேரளா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News