இந்தியா

5-வது கட்ட பாராளுமன்றத் தேர்தல்: 49 தொகுதிகளில் நாளை வேட்பு மனுதாக்கல் தொடக்கம்

Published On 2024-04-25 05:47 GMT   |   Update On 2024-04-25 06:10 GMT
  • 5-ம் கட்டத் தேர்தலில் ராகுல் உள்பட முக்கியத் தலைவர்கள் களம் இறங்க உள்ளனர்.
  • 5-ம் கட்டத் தேர்தல் மனுத்தாக்கல் மே 3-ந் தேதி நிறைவு பெறுகிறது. 6-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

புதுடெல்லி:

பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 19, 26 மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1-ந்தேதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி கடந்த 19-ந்தேதி முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

2-ம் கட்டத் தேர்தலுக்கு கடந்த 4-ந்தேதி மனுத் தாக்கல் தொடங்கியது. 8-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நாளை (வெள்ளிக்கிழமை) 89 தொகுதிகளில் 2-ம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.

3-ம் கட்டத் தேர்தல் 94 தொகுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் கடந்த 19-ந் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. மே மாதம் 7-ந் தேதி 3-ம் கட்டத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

4-ம் கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 18-ந்தேதி தொடங்கி இன்று நிறைவு பெறுகிறது. மே மாதம் 13-ந் தேதி 96 தொகுதிகளில் 4-ம் கட்டத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறும்.

5-ம் கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

5-ம் கட்டத் தேர்தலில் ராகுல் உள்பட முக்கியத் தலைவர்கள் களம் இறங்க உள்ளனர். 5-ம் கட்டத் தேர்தல் மனுத்தாக்கல் மே 3-ந் தேதி நிறைவு பெறுகிறது. 6-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

மே 20-ந்தேதி 5-ம் கட்டத் தேர்தலுக்கான 49 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெறும். உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு 5-ம் கட்டத் தேர்தலில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

அதே போல மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு 5-ம் கட்டத் தேர்தலில் ஓட்டுப்பதிவு நடைபெறும். மேற்கு வங்காளத்தில் 7, ஒடிசாவில்-5, ஜார்க்கண்டில்-3, லடாக் தொகுதி மற்றும் காஷ்மீரில் ஒரு தொகுதி ஆகியவற்றுக்கும் 5-ம் கட்டத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

Tags:    

Similar News