இந்தியா

காரில் சிக்கி 70 கிலோ மீட்டர் தூரம் சென்ற தெருநாயை மீட்டு குட்டிகளுடன் சேர்த்த சிறுமி

Published On 2023-02-08 03:32 GMT   |   Update On 2023-02-08 05:31 GMT
  • பல்வேறு இடங்களிலும் நாயை தேடினார்.
  • நாயை பார்த்ததும் சிறுமி சான்வி சந்தோஷத்தில் குதித்தார்.

பெங்களூரு :

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா கபக்கா பகுதியை சேர்ந்த தம்பதி, தங்கள் காரில் குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் முடிந்து காரில் வீட்டுக்கு புறப்பட்டனர். அவர்கள் பால்பா பகுதியில் வந்தபோது, காரின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. இதனால் டிரைவர் காரை நிறுத்த முயன்றார்.

ஆனாலும் நாய் மீது கார் மோதியது. இதையடுத்து காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி பார்த்தனர். ஆனால் அங்கு நாயை காணவில்லை. கார் மோதிய அதிர்ச்சியில் அந்த நாய் ஓடியிருக்கலாம் என கருதி அவர்கள் காரில் வீட்டுக்கு திரும்பினர்.

வீட்டுக்கு வந்து பார்த்தபோது, காரின் முன்பக்கம் பம்பரில் நாய் சிக்கி உயிருடன் இருந்தது தெரியவந்தது. இதனால் ஆச்சரியம் அடைந்த அவர்கள், அந்த நாயை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் நாயை மீட்க முடியாததால், மெக்கானிக் கடைக்கு சென்று பம்பரை கழற்றி நாயை பத்திரமாக மீட்டனர். நாய் எந்த வித காயமும் இன்றி உயிர் தப்பியது.

மோதிய இடத்தில் இருந்து அந்த தம்பதியின் வீடு வரை சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் அந்த நாய், காரின் பம்பரில் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் அந்த நாயை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அது தெருநாய் என்பதால், அதை அங்கிருந்து விரட்டிவிட்டனர்.

இதையடுத்து அந்த நாய் குப்பை மேடுகளிலும், ஓட்டல்கள் அருகில் சென்று அங்கு வீசப்படும் உணவுகளை தின்று பசியை போக்கி வந்தது. இதற்கிடையே பால்பா பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான குடியிருப்பில் வசித்து வரும் ஒரு சிறுமி அந்த நாய்க்கு தினமும் உணவளித்து வந்தார். அந்த சிறுமி வனத்துறை ஊழியர் சந்தோஷ் ராய் என்பவரின் மகள் சான்வி ராய்(வயது 5) ஆவாள். அந்த நாய் காணாமல் போனது குறித்து அந்த சிறுமி டி.வி.யில் வந்த செய்திகளைப் பார்த்து தெரிந்து கொண்டாள்.

பின்னர் அந்த சிறுமி தனது தந்தையிடம் தான் தினமும் உணவளிக்கும் தெருநாய் பிரச்சினையில் சிக்கி இருப்பதாகவும், தற்போது அதற்கு 3 குட்டிகள் இருப்பதாகவும் கூறினாள். மேலும் அந்த நாயை மீட்டு கொண்டு வர வேண்டும் என்றும் அவள் தந்தையிடம் வேண்டுகோள் விடுத்தாள்.

தனது ஆசை மகள் மழலை மொழியில் உருக்கமாக தெரிவித்த இந்த தகவலை வனத்துறை ஊழியர் சந்தோஷ் ராய் தீவிரமாக எடுத்துக் கொண்டார். மேலும் அவர் அந்த நாயை மீட்கும் முயற்சியில் இறங்கினார். இதற்கிடையே அந்த நாயின் 3 குட்டிகளுக்கும் சிறுமி சான்வி பால் பாட்டில் வாயிலாக பால் கொடுத்து வந்தார். இந்த நிலையில் சந்தோஷ் ராய், அந்த நாயை யாரேனும் கண்டால் தனக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறி சமூக வலைத்தளங்களில் தகவலை பரப்பினார்.

மேலும் தனது செல்போன் எண்ணுடன், நாயின் புகைப்படம் மற்றும் வீடியோவையும் இணைத்திருந்தார். இந்த நிலையில் அந்த வீடியோவைக் கண்ட ஆயத்த ஆடை நிறுவன ஊழியர், உடனடியாக சந்தோஷ் ராயை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நாய் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவித்தார். அப்போது அந்த நாய் புத்தூரில் இருப்பதாக கூறினார். கபக்கா பகுதியில் காரின் உரிமையாளரால் விரட்டப்பட்ட நாய், அங்கிருந்து புத்தூர் பகுதிக்கு சென்றிருந்தது.

இதையடுத்து சந்தோஷ் ராய், புத்தூருக்கு சென்றார். அவர் ஓட்டல்கள் இருக்கும் பகுதியிலும், பல்வேறு இடங்களிலும் நாயை தேடினார். அப்போது அந்த நாய் ஒரு ஓட்டலின் அருகே நின்று கொண்டிருந்தது. சந்தோஷ் ராயை பார்த்ததும் அந்த நாய் அடையாள கண்டு அவரிடம் ஓடி வந்து தஞ்சம் அடைந்தது. இதையடுத்து சந்தோஷ் ராய், அந்த நாயை கட்டித்தழுவினார். பின்னர் அவர் அந்த நாயை கார் மூலம் அழைத்து வந்து பால்பா பகுதியில் குட்டிகளுடன் விட்டார்.

அந்த நாயை பார்த்ததும் சிறுமி சான்வி சந்தோஷத்தில் குதித்தார். பின்னர் அந்த நாய், தனது 3 குட்டிகளுக்கும் பால் கொடுத்தது. அதை சிறுமி சான்வி நெகிழ்ச்சியுடன் பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News