இந்தியா

நீச்சலில் சாதனை படைத்த மூதாட்டி ஆரிபா.

2 கைகளையும் கயிற்றால் கட்டியபடி ஆற்றில் நீந்திய 70 வயது மூதாட்டி

Update: 2022-06-27 08:45 GMT
  • பயிற்சிக்கு சென்ற பின்பு நீச்சல் கற்று கொடுத்த பயிற்சியாளர், ஆரிபாவின் ஆர்வத்தை பார்த்து அவரை கைகளை கட்டியபடி நீச்சல் பயிற்சி எடுக்குமாறு கூறினார்.
  • அவரும் சவாலை ஏற்றுக்கொண்டு கைகளை கட்டியபடி நீச்சல் அடிக்கும் பயிற்சியை மேற்கொண்டார். இதில் நன்கு பயிற்சி பெற்றதும், அதனை பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

திருவனந்தபுரம்:

சாதனைக்கு வயது தடையில்லை என்பதை கேரள மாநிலம் ஆலுவாயை அடுத்த வி.கே. குன்னும்புரத்தை சேர்ந்த ஆரிபா என்ற 70 வயது மூதாட்டி நிரூபித்து உள்ளார்.

ஆரிபாவின் உறவினர்கள் மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் நீச்சல் தெரியும். அவர்கள் ஆலுவாவில் உள்ள ஒரு நீச்சல் அகாடமியில் பயிற்சி பெற்றனர்.

அவர்களை பார்த்து ஆரிபாவுக்கும் நீச்சல் கற்க ஆசை வந்தது. எனவே அவரும் அதே அகாடமியில் நீச்சல் கற்க சேர்ந்தார்.

பயிற்சிக்கு சென்ற பின்பு நீச்சல் கற்று கொடுத்த பயிற்சியாளர், ஆரிபாவின் ஆர்வத்தை பார்த்து அவரை கைகளை கட்டியபடி நீச்சல் பயிற்சி எடுக்குமாறு கூறினார்.

அவரும் சவாலை ஏற்றுக்கொண்டு கைகளை கட்டியபடி நீச்சல் அடிக்கும் பயிற்சியை மேற்கொண்டார். இதில் நன்கு பயிற்சி பெற்றதும், அதனை பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி ஆலுவாவில் உள்ள பெரியாறு ஆற்றில் இந்த சாதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆரிபாவுடன் 11 வயது சிறுவன் மற்றும் 38 வயதான தன்யா என்ற பெண்ணும் கலந்து கொண்டனர்.

இவர்கள் பெரியாறு ஆற்றில் 780 மீட்டர் அகலத்தை கைகளை கட்டியபடி நீந்தி கடந்தனர். இவர்களின் பாதுகாப்புக்காக நீச்சல் வீரர்கள், மருத்துவ குழுவினர் ஒரு படகில் சென்றனர்.

அவர்களின் துணையுடன் மூதாட்டி ஆரிபா, ஆற்றில் 780 மீட்டர் தூரத்தையும் 45 நிமிடத்தில் நீந்தி கடந்தார்.

இச்சாதனையை படைத்த ஆரிபா கூறும்போது, அனைவரும் கண்டிப்பாக நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும். இதன்மூலம் நீரில் மூழ்கி பலியாவதை தடுக்கலாம்.

நீச்சல் கற்றுக்கொள்ள வயது தடையில்லை. இதை கற்றுக்கொள்வதால் நம்பிக்கை பிறக்கும். இதனை பொதுமக்களுக்கு தெரிவிக்கவே நான் இந்த முயற்சியில் இறங்கினேன் என்றார்.

Tags:    

Similar News